கடமையை செய், உனக்கு அற்புத விளக்கை நான் தருகிறேன் என்றால் யார்தான் விடுவார்கள்?
அந்த அற்புத விளக்கிலிருந்து வாழ்க்கையே ஒரு இரவில் மாறப்போகும் பலன் கிடைக்கப்போவதாக எண்ணி நாயகன்; கொடுக்கப்படும் கடமையில் இறங்குகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் மனம்மாறி அந்த பலனே வேண்டாம் என கடமையை கஸ்டப்பட்டு செய்து கொடுக்கிறார்.
ஒரு காட்சியில் கதாநாயகி ஹம்சத்வனியின் பெயரையும் கதையின் நாயகி நீத்து பெயரையும் மாற்றி அழைத்து உரையாடுவது; எப்போதும் ''இழு' 'தள்ளு' கதவுகள் தரும் சாத்தல்கள், சுயநலத்தை மாற்றும் அன்புக்கரம் என்று பல வாழ்க்கை யதார்த்தங்களை திரைக்கதையில் இயல்பாக காட்டுவது அசாதாரணம்.
மும்பையில் மருந்துக்கடை நடத்திவரும் நாயகனை அக்கடை இருக்கும் கட்டிடத்தின் சொந்தக்காரர் உடல்நள குறைவான தனது தாயை ஊரிலிருந்து (கேரளா) கூட்டிவர சம்மதம் கேட்கிறார். இவ்வளவு காலமும் விமானத்தில் மும்பைக்கு வந்து சென்றுகொண்டிருந்த அந்த உம்மாச்சி பிடிவாதமாக இம்முறை ரயிலில் தனியே பயணிக்க ஆசைபட்டதால் நாயகன் ஐபோனுக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொள்கிறார். அங்கிருந்து பயணமாகும் கதை பல திருப்பங்களை சந்தித்து கோவாவில் நின்று அதன்பின் மும்பை வந்து சேர்கிறது.
பெண் கல்வி உரிமையையும் மனிதாபிமான பிணைப்பையும் இணைத்து ஓவிய காட்சிகளிக்கிடையே விரிந்து பறக்கும் கதை; ரயிலில் தூர தேசமொன்றுக்கு பயணித்து முடித்த அனுபவத்தை தந்து நிறைகிறது.
விஜி வெங்கடேஷ், பகத் பாசில், வினித், அஞ்சனா, திவானி ராஜேஸ் என தெரிந்த முகங்களும் புது முகங்களும் மனதில் பதிந்த முகங்களாக மாறி ஆச்சர்யமளிக்கின்றனர்.
மலையாள திரையுலகில் அகில் சத்யன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் தமிழிலும் வெளியாகியிருந்தது. படத்தில், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மொழிகளில் உரையாடல்கள் கலந்திருந்தாலும் சில வசனங்கள் தனித்து கலக்குகின்றன. பாடல்களுடன் பின்னனி இசையும் அருமை. மொத்தத்தில் பீல்குட் திரைப்படங்களில் பாச்சுவும் அற்புத விளக்கும் ஒளி பரப்பி பிரகாசிக்கிறது எனலாம்.