free website hit counter

பொன்னியின் செல்வன் பாகம் 2 : விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொன்னியின் செல்வனின் பாகம் 1 வெளியாகி ஏழு மாதங்களுக்குப் பின் அதன் தொடர்ச்சியான பாகம் 2 பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரைக்கு வந்துள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பகுதி முடிந்த இடத்திலேயே இரண்டாம் பாகம் தொடங்குகிறது. பாண்டியர்களுடன் போரிட்டு கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) மற்றும் வல்லவரையன் வந்தியதேவன் (கார்த்தி) ஆகியோர் ஊமைப் பெண் மந்தாகினியால் (ஐஸ்வர்யா ராய்) காப்பாற்றப்படுகிறார்கள். பின்னர் அருண்மொழி வர்மன் இலங்கையில் புத்த மடத்தில் சிகிச்சை பெறுகிறார்.

அதே நேரத்தில், சோழர் நிலத்தில் நந்தினி (ஐஸ்வர்யா ராய்), பாண்டியர்களுடன் சேர்ந்து, சோழ வம்சத்தை ஒழிக்க ஒரு சதித்திட்டத்தை திட்டமிடுகிறார். ஆதித்ய கரிகாலனை (விக்ரமன்) வீழ்த்தி மதுராந்தகனைச் (ரஹ்மான்) சோழ மன்னனாக்க சோழ வம்சத்தின் தலைவர்கள் முயற்சிக்கும் நேரமும் இதுவே. பிறகு என்ன நடந்தது? உண்மையில் மந்தாகினி யார் ? நந்தினி மந்தாகினியை ஒத்திருப்பதன் மர்மம் என்ன? அருண்மொழியும் வல்லவரையன் வந்தியதேவனும் சோழ நிலத்துக்குத் திரும்பினார்களா? கடைசியில் யார் மணிமகுடம் சூடினார்கள் என்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்தில் பதில்கள் கிடைக்கின்றன.

முதல் பாகத்தின் திரைக்கதையில் அதிகப்படியான கதாபாத்திரங்கள் காரணமாக பலருக்கும் புரியாத அல்லது குழப்பமாகவிருந்த திரைக்கதை இரண்டாம் பாகத்தில் எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகவும், நேராகவும் அமைந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 1ம் பாகத்தில் விடை தெரியாத அனைத்து கேள்விகளுக்கும் 2ம் பாகத்தில் விடை கிடைக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. ஆனால் இது கல்கியின் நாவலை ஒத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே சரியானதாக இருக்கும். ஆனாலும் கதை நேர்த்தியாகவும் அழகாககவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் பாகத்தில் கதாதபாத்திரங்களாத் தோன்றும் நடிகர்கள் அனைவருமே தங்கள் நடிப்பாற்றலைக் கச்சிதமாக வெளிப்படுத்தி பாத்திரங்களுக்கான வடிவத்தினை முழுமையாகத் தருகின்றார்கள். குறிப்பாக ஐஸ்வர்யா ராய், நந்தினியாகவும், மந்தாகினியாகவும் கச்சிதமாகத் தோன்றி, படத்தின் கதைக்களத்திற்கு வலுச்சேர்த்துள்ளார். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆதித்தகரிகாலனாக வரும் சியான் விக்ரம் இடையேயான காட்சிகள் மிகவும் நுட்பமானது. இரண்டாம் பாகத்தில் நடிப்பில் விக்ரம் தன் பிரமாண்டம் காட்டுகின்றார்.

70 ஆண்டுகால வரலாற்றுப் புனைவான பொன்னியின் சொல்வனில் பாத்திரப்படைப்பு என்பது மிகவும் முக்கியமானது. இதன் கதாபாத்திரங்களில் தோன்றும் ஜெயம்ரவி, கார்த்திக், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், சரத் குமார், பார்த்திபன், கிஷோர், ஜெய சித்ரா, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோரின் பாத்திரங்கள் அனைத்துமே கதையின் நகர்வுக்கு முக்கியமானவை.

இந்தக் கதாபாத்திர நடிகர்களையும், திரைக்கதையினையும் வைத்து, முதலாம் பாகத்தினையும் விட சிறப்பானதாகவே இரண்டாம் பாகத்தினைத் தந்திருக்கின்றார் மணிரத்னம். ஆனாலும் நாவல்களை, திரைப்படமாக மாற்றுகையில் அதனை லயித்துப் படித்த வாசகர்கள் அனைவரது மனதிலும் கதாபாத்திரங்கள் ஒரேவகையில் வடிவம் பெற்றிருக்கும் எனச் சொல்ல முடியாது. ஆனால் அதனை எல்லோர்க்கும் பொதுவாக வடிவமைப்பதில் மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல், கூட்டணி வெற்றிபெற்றுள்ளதாகவே கூறவேண்டும்.

இந்த வெற்றிக் கூட்டணியின் திரைக்கதையை சிறப்பான காட்சிப்படுத்தல்களால் பெருமை சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். தோட்டா தரணியின் கலை இயக்கம் இல்லாது பொன்னியின் செல்வனது பிரம்மாண்டத்தை நிச்சயம் காட்சிபடுத்தியிருக்க முடியாது. அதேபோல் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களது உணர்வினையும், சோழப்பெருமையினையும் உணர்த்தும் வகையில் முதலாம் பாகத்தினைவிடவும் சிறப்பாகவே இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். பின்னணி இசை அமைந்துள்ளது.

ஆக, பொன்னியின் செல்வன் முதலாம் பாகத்தின் பெருவெற்றி மீது இரண்டாம் பாகம் நிச்சயம் போர் தொடுக்கும் எனலாம்...

- 4தமிழ்மீடியா விமர்சனக்குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula