சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் வருடங்தோறும் நடைபெறும் மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவின் 57வது பதிப்பு, ஏப்பிர் 16 முதல் ஏப்பிரல் 26 வரை நடைபெறுகிறது. இத் திரைப்படவிழாவில், பன்னாட்டு குறும், பெரும் ஆவணத் திரைப்படப் படைப்பாளர்களின் படைப்புக்கள் திரையேற்றம் பெறுகின்றன.
Vision du Reel திரைப்பட விழாவில் தேசிய போட்டிப் பிரிவில், போட்டியிடும் முழு நீளத்திரைப்படம் Nicole Nicole (அன்பின் ஆழம்). Lauren Dallenbach இயக்கத்தில் உருவான இந்த ஆவணத் திரைப்படத்தின் கதாநாயகி Nicole, 55 வயது பெண்மணி. 87 வயதுடைய தனது தாயுடன் சுவிற்சர்லாந்தின் லெமன் ஏரிப்பகுதியில் ஒரு தனிவீடு ஒன்றில் வாழ்ந்து வருகின்றனர்.
நிகோல், அங்கவீனர்களுக்கான அல்லது மனநல வளர்ச்சி குன்றியவர்களுக்கான காப்புறுதி நிதியுதவியில் வாழ்ந்து வருகின்றார். தாயை விட்டு தனியாக வாழ்வது அவரால் முடியாத காரியம் என படம் பார்க்கத் தொடங்கையில் எண்ணத்தோன்றும். சுயாதீனமாக தனித்து முடிவெடுத்து தனக்கான வாழ்வை அமைத்து கொள்ளும் முதிர்ச்சி அவரிடம் இல்லை. அவருடைய மனம் சிறுபிள்ளை போன்றது. அவரது தாயோ, தான் தனித்து வாழ்வதோ, மகளை தனித்து வாழ அனுப்புவதோ முடியவே முடியாது என அடம்பிடிப்பவர். நிகோலின் மருமகளான Lauren, இவர்களின் முரண்பாட்டுக்கு இடையில் நின்று இருவரையும் படம்பிடித்திருக்கிறார்.

நிகோல் இந்த வீட்டிலிருந்து புறப்பட்டு தனியாக வாழ முடியுமா, தயராகுகிறாரா, எங்கு அவர்களது தயக்கம் இருக்கிறது என அனைத்தையும் தன் கமெராவினால் அந்த வீட்டின் நான்கு சுவற்றுக்குள் படம்பிடிக்கிறார். பிறப்பிலிருந்தே மனநலத்தின் ஆரோக்கியத்தில் நிகோலுக்கு சவால் இருக்கிறது. ஆனால் முழுவதுமாக காப்புறுதி பொறுப்பேற்றுக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு அங்கவீனம் கிடையாது.
சிறிது சிறிதாக சில வேலை வாய்ப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றார். தனியாக வாழ வீடு தேடுகிறார். அவரது சகோதரியின் உதவியுடனும், அழுத்தத்துடனும் தனக்கான தனி வாழ்க்கை என்ன என்பதை கொஞ்சம் கொஞ்சம் தேடத்தொடங்குகின்றார். இதுவரை தாயுடன் உதவியிலேயே வாழ்ந்திருந்தவர் 55 வயதில் தனக்கான வாழ்க்கை பொறுப்பை தேடி செல்ல நினைக்கையில் அப்பிரிவு இலகுவானதில்லை என தாய், மகள் இருவருக்கும் தெரிகிறது.
படம் ஆழமாக நகர்ந்து செல்ல செல்ல, மகளை விட, தாய்க்கே தன் மகளை பிரிந்து தனித்து வாழ்வது எந்தளவு கடினமானது என வெளிப்படையாகவே அவரது வேதனையை பகிர்ந்துகொள்கிறார். ஒரு உணவகத்தில், நிகோல், அவரது சகோதரி, படத்தின் இயக்குனர் இணைந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். முன்னால் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் நிகோலுக்கு உதவும் சமூக சேவகர்.
தாய் திடீரென இறந்துவிட்டால், நீ தனித்துவிடுவாய் அல்லவா, எப்படி இந்த வீட்டில் வாழ்வாய் என நிகொலின் சகோதரி நிகொலிடம் வெளிப்படையாகவே சற்று உரக்க கேட்க, அந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத நிகோல், அழத்தொடங்கிவிடுவார். கமெராவின் பின்னால் இருந்து சற்றென முன்னால் வந்து, நாங்கள் இருக்கிறோம் என இயக்குனர் உட்பட ஒவ்வொருவராக வந்து அணைத்து கொள்வார்கள்.
மனித காருண்யம் அழகாக வெளிப்படும் தருணங்கள் அவை.
படத்தின் கதை நிகொலால் தனியாக வாழ முடியுமா இல்லையா என்பதை மாத்திரம் கொண்டு நகராது. நிகொலின் ஆசைகளின் ஒன்றான ஒரு காதல் கதை எழுதுவது, அதை புகைப்படங்களுடன் கூடிய உரையாடல் கதையாக புத்தகமாக்குவது எனும் விருப்பத்தை அப்படத்தின் இயக்குனர் நிஜமாகவே ஒரு ஸ்டூடியோவுக்கு சென்று படம்பிடித்து அதை கதையாக செய்து நிறைவேற்றி வைப்பார். அது ஒரு தனிக்கதையாக செல்லும். படத்தின் கதைக்கரு ஏதோ மிகப்பாரமானது போல் தோன்றும், ஆனால் மெல்லிய நகைச்சுவையுடன், நிகொலில் இருக்கும் சிறுபிள்ளையின் அப்பறியா பண்புகளையும், இரு வளர்ந்த ஒருவருக்கு இருக்கும் பல குணாதிசயங்களையும் அடிக்கடி கோடிட்டு காட்டிக்கொண்டே இருக்கும் இத்திரைப்படம்.
படம் முழுவதும் மனிதம் நிரம்பிவழியும். ஒரு நிமிடத்தில் கூட அவர்கள் இருவரும் மீது வெறுப்பு ஏற்படாது. எந்தளவு அவர்கள் தனித்திருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்றது போல் அனுசரித்து வாழ வெளியுலகம் தையாரில்லை என்பதே மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். ஒரு ஆவணத்திரைப்படத்தின் ஊடாக மன நலம் குன்றியவர்களின் இயல்பான வாழ்க்கையை எந்தவொரு எதிர்மறையான அடையாளப்படுத்தலும் இன்றி அவர்களின் ஒப்புதலுடனேயே அழகாக காட்டுவது மிக அரிது. அந்தப் பணியை இந்த திரைப்படமும், இதன் இயக்குனரும் திறம்பட, மிக நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள்.
ஒரு ஆவணத்திரைப்படத்தின் ஊடாக தமிழ்ச்சமூகத்தில் எத்தனை பேரின் கதைகளை இதே போன்று சொல்லலலாம், வெளியுலகத்துக்கு கொண்டுவரலாம் எனும் எண்ணம் படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை எனக்குள் வந்து சென்று கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா சமூகம் பயணிப்பதற்கு இன்னமும் அதிக தூரம் இருக்கிறது.
-4தமிழ்மீடியாவுக்காக : நியோனிலிருந்து ஸாரா
