தமிழகக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு தினங்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் ‘நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். சற்று நேரத்தில் வெடித்து சிதறும்.. முடிந்தால் தடுத்து பாருங்கள்’ என்று கூறியுள்ளார். உடனடியாக போலீசார் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால், எந்தவொரு வெடிபொருளும் கிடைக்கவில்லை. மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணைக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சம்மந்தப்பட்ட எண்ணுக்குரிய ஆசாமிய ட்ராக் செய்தனர். அப்போது விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சேர்ந்த 26 வயது புவனேஸ்வரன் தான் அந்த மிரட்டலை விடுத்தவர் என்று தெரியவந்தது.
அவரைக் கைது செய்ய போலீஸ் படை விரைந்தது. ஆனால், புவனேஷ்வரன் வீட்டுக்குச் சென்றபிறகுதான் அவர் மனநலம் பாதித்த ஒரு இளைஞர் என்பதும் அதற்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தவர் என்று தெரிய வந்தது. தற்போது சிகிச்சை இன்மையால் மீண்டும் மனநல பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் என்பதும் விசாரனையில் தெரியவந்துள்ளது. இவர், அஜித்துக்கு மட்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் இல்லையாம்; முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கி பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் துறை தலைவரான எஸ் பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரனுக்கு நூற்றுக்கும் அதிகமான தொலைபேசி எண்கள் நினைவில் உள்ளன. எங்காவது போன் கிடைத்தால் யாரோ ஒருவருக்கு இது போன்ற மிரட்டல் விடுக்கிறார். அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு பேசிவிடுகிறார். அவருக்கு மீண்டும் மனநல சிகிச்சையைத் தொடர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் உத்தரவிட்டதும் சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அவரை சேர்த்து அவர் பூரண குணமடைய உதவி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.