கடந்த 2015- வருடம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் பிரேமம். இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கேரக்டர் பற்றி அதனுடைய எழுத்தாளர் மற்றும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தற்போது புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய சமூக வலைதள பதிவில்: “நான் முதலில் உருவாக்கிய டீச்சர் கேரக்டரில் நடிகை அசின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். இதுபற்றி அவரிடம் பேசி சம்மதிக்க வைக்க அவரைத் தொடர்பு கொண்டேன். ஆனால் முடியவில்லை. அசினுக்காகப் பார்த்து பார்த்து உருவாக்கிய கேரக்டரில் பல மாற்றங்களைச் செய்து, கேரக்டரின் பெயரையும் மலர் என்று மாற்றி, அதில் சாய்பல்லவி நடிக்க வைத்தேன்.அசின் நடிக்கச் சம்மதித்து இருந்தால்கூட மலர் கேரக்டர் இந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்குமா என்பது சந்தேகம்தான்!” என்று மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
இதுவொருபுறமும் இருக்க, தமிழில் ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் டைட்டில் வெறும் பெறாத புகழை, மலர் டீச்சராக அறிமுகமாகி பெற்றுக்கொண்ட சாய் பல்லவி, பிறகு மாரி படத்தில் ரவுடி பேபியாக தமிழில் ஆட்டம்போட்டு, தற்போது தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாக இருக்கும் சாய் பல்லவி, அடுத்து ஹிந்திக்குப் போகிறார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரேயா நடிப்பில் 2006 வெளிவந்த ‘சத்ரபதி’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. அந்தப் படத்தில் நடிக்க சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். சாய் பல்லவி இப்போது ‘பான் இந்தியா ஆக்ட்ரஸ்’ என்ற பெருமையை பெற்றுவிட்டார். இதற்குமேல் அவருக்கு என்ன வேண்டும்!