நவம்பர் 10 ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் கடந்து சென்ற பாரிய விண்கல்!
A380 ஏர்பஸ் ரக பயணிகள் விமானத்தை விட பெரியளவிலான பாரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே நவம்பர் 10 ஆம் திகதி கடந்து சென்றதாகவும் இது பூமியுடன் மோதியிருந்தால் மிகப்பெரும் அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கையும் விடுக்கப் பட்டிருந்தது.
அண்மையில் நாசா விஞ்ஞானிகள் செய்மதி ஒன்றை சிறிய ரக விண்கல்லுடன் மோதச் செய்து அதன் பாதையை குறிப்பிடத்தக்களவு திசை திருப்பியிருந்தனர் என்பதும் இது மிக முக்கியமான ஒரு சாதனை என்றும் பரவலாகப் பேசப் பட்டிருந்தது. இந்நிலையில் 2019 XS என்று பெயரிடப் பட்ட குறித்த விண்கல் கிட்டத்தட்ட 328 அடி நீளமானது என்றும் நவம்பர் 10 ஆம் திகதி மணிக்கு 42 727 கிலோமீட்டர் வேகத்தில் பூமிக்கு அருகே 6.4 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் கடந்து சென்றதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
பூமியின் காற்று மண்டலத்தில் ஒவ்வொரு நாளும் பல சிறிய ரக விண்கற்கள் நுழைந்த வண்ணமே உள்ளன. ஆனால் இவை அனைத்தும் தரையை அடையும் முன் காற்றில் எரிந்து முற்றாக அழிந்து விடும். இதனை சில நேரம் இரவு வானில் வெறும் கண்ணால் கூட அவதானிக்கலாம்.
ஆனால் புள்ளி விபரப்படி ஒவ்வொரு 2000 வருடத்துக்கு ஒரு முறை ஒரு உதைப் பந்தாட்ட மைதானத்தின் அளவுடைய விண்கல் பூமியில் மோதக் கூடும் என்றும் இதனால் பலத்த சேதம் ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது. மனித வரலாற்றில் செலியாபின்ஸ்க் மோதுகை என்று கூறப்படும் விண்கல் மோதுகை நிகழ்வு ஒன்றில் பலர் மரணமடைந்ததாக அறியப் படுகின்றது.
புவியியல் வரலாற்றில் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற விண்கல் மோதுகையால் அப்போது வாழ்ந்து வந்த டைனோசர் இனம் பூண்டோடு அழிந்ததாகவும் ஓர் தடயவியல் கோட்பாடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டோங்காவைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம்! : சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
வெள்ளிக்கிழமை 7.3 ரிக்டர் அளவுடைய மிக வலிமையான நிலநடுக்கம் ஒன்று டோங்காவின் கடற்கரையில் இருந்து 130 மைல் தொலைவை மையமாகக் கொண்டு தாக்கியது. இதனால் பசுபிக் சமுத்திரத்தின் அனைத்துத் தீவு நாடுகளுக்கும் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டது.
ஆயினும் சமுத்திரத்துக்கு அடியில் 24.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மிகப் பெரியளவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. ஜனவரி 15 ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் எரிமலை சீற்றமாக டோங்காவுக்கு அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து சிதறியதில் சுனாமி அலைகள் எழுந்ததுடன் வானில் பல அடி உயரத்துக்கு கரும் சாம்பல் புகையும் ஏற்பட்டது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சத்தமும், அதிர்வும் நியூசிலாந்து வரை உணரப்பட்டது.
உலகத் தலைவர்களை ஒருமைப் பாட்டுக்கு அழைக்கும் தென்கிழக்காசியத் தலைவர்கள்
கம்போடியாவின் ப்னெம் பென்ஹ் நகரில் 41 ஆவது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. இதில் தென்கிழக்காசிய நாடுகளினது பிரதிநிதியும், கம்போடியாவின் அதிபருமான ஹுன் சென் உலகத் தலைவர்களது ஒருமைப் பாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முக்கியமாக அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒருமைப் பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இப்போது உலகளவில் வல்லாதிக்க சக்திகளால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எல்லா நாடுகளையும் பாதிப்பதாக ஹுன் சென் தெரிவித்துள்ளார்.
தாய்வான் விவகாரம் மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் பிராந்திய ஆதிக்கம் போன்ற காரணிகளால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பிணக்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் உக்ரைன் மீதான ரஷ்யஎ
படையெடுப்பு பூகோள விநியோகச் சங்கிலியை மிகவும் பாதித்திருப்பதாகவும், இதனால் சக்தி மற்றும் உணவுக்கான விலை ஐரோப்பாவைத் தாண்டி ஆசியாவிலும் பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் ஹுன் சென் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆசியான் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடென், சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் ஜப்பான், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென்கொரியா உட்பட இன்னும் பல நாட்டுத் தலைவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
நாளை திங்கட்கிழமை பாலியில் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடென், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.