இனிவரும் காலத்தில் தனது ஆற்றல்களை எலொன் முஸ்க் எவ்வாறு பயன்படுத்தக் கூடும்?
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் உரிமையாளரும், ஸ்பேஸ் எக்ஸ் என்ற மிகப் பிரசித்தமான தனியார் விண்வெளி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான எலொன் முஸ்க் என்பவர் தான் இன்றைய உலகின் பூகோள அரசியலில் தாக்கம் செலுத்தி வரும் மிக முக்கியமான செல்வந்தருமாவார்.
இனி வரும் காலத்தில் அதிகளவு மின்சாரக் கார்களைத் தயாரித்து சந்தைப் படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழல் மாசினைப் பெருமளவு தடுப்பதும், செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களது குடியேற்றத்தை உருவாக்குவதும் இவரது இனிவரும் காலத்துக்கான இலக்குகளில் முக்கியமானவையாக உள்ளன.
ஆக்டோபரில் மக்களது கருத்துச் சுதந்திரத்துக்கான முக்கிய சமூகத் தளமாக விளங்கும் டுவிட்டரை எலொன் முஸ்க் $ 44 பில்லியன் விலை கொடுத்து வாங்கியமை உலக அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும் பூமியில் எப்பாகத்தில் இருந்தும் முக்கியமாக இராணுவ நடவடிக்கைகளின் போது இலகுவாக அதிவேக இணைய வசதியைப் பாவிக்கும் விதத்தில் எலொன் முஸ்க்கின் ஸ்டார்லிங் (Starlink) என்ற செயற்திட்டமும் தற்போது செயற்படுத்தப் பட்டு வருகின்றது. பல கூட்டு செய்மதிகளது நெட்வேர்க்கை பூமியின் தாழ்ந்த ஆர்பிட்டரில் நிறுத்தி அவற்றின் வலைப் பின்னல் மூலம் Internet வழங்குவதே இத்திட்டமாகும்.
இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரில் ரஷ்யத் துருப்புக்களது நிலைகளை அறிந்து வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்த உக்ரைன் படைகளுக்கு எலொன் முஸ்க்கின் உதவி கிடைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டுவிட்டரைப் பெரும் விலை கொடுத்துத் தற்போது எலொன் முஸ்க் வாங்கியிருப்பது உக்ரைன் போரிலும், உலகில் ஏனைய முக்கிய விடயங்களிலும் கடும் செல்வாக்கைச் செலுத்தும் என்பதும் முக்கியமானது. எலொன் முஸ்க்கினை பிரபல ஹாலிவுட் காமிக் கதாபாத்திரமான அயர்ன்மேனும், பில்லியனருமான டோனி ஸ்டார்க் மற்றும் அவரது பிரபல தொழிநுட்பத் திட்டங்களுடனும் ஒப்பிட்டு The Economist பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் எங்கெல்லாம் அதிகளவு வல்லமை அல்லது ஆதிக்கம் சக்தி இருக்கின்றதோ அங்கெல்லாம் மிக அதிகளவு பொறுப்புணர்வு தேவைப் படுகின்றது என்றும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
இந்தியாவின் அடுத்த பசுமைப் புரட்சி (Green Revolution)?
புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை 67% வீதம் வெளியேற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள், தமதி சக்தித் தேவைக்கு 1/3 பங்கு நிலக்கரியைச் சார்ந்துள்ளன. ஆனால் இதில் இருந்து விடுபட்டு மாசற்ற சக்தி வழங்கும் பொறிமுறைக்கு இவை திரும்ப அதிக வாய்ப்பிருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நிலக்கரியைச் சார்ந்திருக்கும் ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியா மற்றும் சீனாவை எடுத்துக் கொண்டால் சீனாவை விட வேகமாக இந்தியா மாசற்ற சக்திப் பொறிமுறைக்கு மாறும் அறிகுறிகள் தென்படுவதாகவும், இது இந்தியாவின் அடுத்த பசுமைப் புரட்சியாக அமையக் கூடும் என்றும் எரிசக்தித் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் மிக அதிகளவு சக்தித் தேவை இருக்கும் சனத்தொகை மிகுந்த நாடு இந்தியா. இந்த தசாப்தத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை உடைய நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு 2040 ஆம் ஆண்டளவில் முழு ஐரோப்பிய யூனியனுக்கும் இணையான மின்சாரத் தேவை இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
உலகின் முக்கியமான ஒரு சில நாடுகளைப் போன்று 2070 ஆம் ஆண்டளவில் பூச்சிய கார்பன் வெளியேற்றத்தை அடைந்து விடும் ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் மாசற்ற சக்திப் பொறிமுறைகளான சூரிய ஒளி மூலம் மின்சாரம், ஹைட்ரஜன் ஆலைகள், காற்றாடி மூலம் மின்சாரம் போன்ற வழிகளுக்கு இந்தியாவில் முதலீடுகள் பில்லியன் கணக்கான டாலர்களாக அதிகரித்து வருகின்றது.
இதில் இந்தியாவின் சொந்த வணிக நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் மூலம் 2030 ஆமாண்டுக்குள் இந்தியாவில் சுவட்டு எரிபொருள் மூலமான சக்தித் தேவைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் அங்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.