டெக்சாஸில் போர் விமான விபத்தில் 6 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் என்ற நகரில் 2 ஆம் உலகப்போர் காலத்து விமானங்களது சாகச நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதன் போது எதிர்பாராத விதமாக இரு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
இவ்விமானங்கள் இரண்டில் ஒன்று பெரிய ரக போயிங் பி - 17 குண்டு வீசும் விமானமும் மற்றையது சிறியரக பெல் பி63 கிங்கோப்ரா என்ற விமானமும் ஆகும்.
இவ்விமானங்கள் வானில் மோதி தரையில் வீழ்ந்து பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட அதிர்வால் சாகசத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. விபத்தில் சிக்கி இறந்தவர்களினரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து டல்லாஸ் நகர மேயர் எரிக் ஜான்சன் அறிக்கை விடுத்துள்ளார்.
சீனப் பிரதமருடான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது! : அவுஸ்திரேலியப் பிரதமர்
கம்போடியாவில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனேசேவும், சீனப் பிரதமர் லீ கெகியாங்கும் கலந்து பேசியுள்ளனர்.
இப்பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இரவு உணவு விருந்தின் போதான செய்தியாளர் மாநாட்டில் அந்தோனி அல்பனேசே தெரிவித்துள்ளார். மேலும் எப்போதும் அது எந்த விவகாரமாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நினைப்பது பயன் தரக் கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் சாத்தியப் படக்கூடிய துறைகளில் சாத்தியமான விதங்களில் சீனாவுடன் இயன்றவரை கைகோர்க்க அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாகவும் அவுஸ்திரேலியப் பிரதமர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.