தாய்வான் விவகாரத்தில் தனது செயற்பாடுகளுக்கு அமெரிக்கா கடும் விலையைக் கொடுக்க நேரிடும் என சீனாவின் மாநில கவுன்சிலரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ வியாழக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
உலகில் ஜனநாயக ரீதியிலான சுயாட்சி நடைபெற்று வரும் தாய்வான் நாடானது தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் என சீனா கூறி வருவதுடன் கடந்த இரு வருடங்களாக தாய்வான் மீதான இராணுவ மற்றும் இராஜதந்திர அழுத்தங்களை அதிகரித்து வருகின்றது.
மேலும் தாய்வானுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுக்கு தனது கோபத்தையும் சீனா வெளிக் காட்டி வருகின்றது. இந்நிலையில், தாய்வான் சுதந்திரப் படைகளுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் தாய்வானை மிக ஆபத்தான சூழலில் தள்ளுவது மட்டுமல்லாது அமெரிக்காவும் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என வாங் யீ மேலும் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் தாய்வானுக்கு ஆதரவையும், ஆயுதப் பங்களிப்பையும் வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவில் கடும் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. தாய்வான் அரசோ தாம் ஒரு சுதந்திர நாடு என்றும் தமது சுதந்திரத்தையும், ஜனநாயத்தையும் பாதுகாப்பது எமது உரிமை என்றும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் தாய்வானானது சீனப் பெரும் நிலத்துடன் இணைவதைத் தவிர அதற்கு வேறு முன்னேற்றகரமான வழி எதுவும் கிடையாது என வாங் யீ கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.