மிக வேகமாகப் பரவும் தனது தன்மை காரணமாக கோவிட்-19 இன் ஒமிக்ரோன் மாறுபாடானது தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிக முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.
உலகளவில், அமெரிக்காவில் அதிகபட்சமாகக் கடந்த ஒரே நாளில் 3 இலட்சம் பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் இதில் பெரும்பான்மையாக ஒமிக்ரோன் தொற்று இருப்பதும் அறியப் பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் 1811 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 50 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் அமெரிக்காவில் 50 கோடிப் பேருக்கும் அதிகமாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் ஒமிக்ரோன் தொற்று இனம் காணப் பட்ட போது அமெரிக்கா தடை விதித்த தென்னாப்பிரிக்காவிலுள்ள 7 நாடுகளுக்கான பயணத் தடையை தற்போது மீளப் பெற்றுள்ளது.
அதிபர் பைடெனின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக ஒமிக்ரோன் மாறுபாடு தடுப்பூசி செலுத்தப் பட்டவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் குறைவு என வெளிவந்த பல மருத்துவ ஆய்வுகளின் முடிவே ஆகும். இதேவேளை ஐரோப்பாவில் அதிகபட்சமாக பிரான்ஸில் கடந்த ஒரு நாளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸில் கோவிட் நோயாளிகளுக்கான மருத்துவ மனைகள் மீண்டும் நிரம்பி வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜனவரி 15 ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பொது இடங்களில் அனுமதிக்கப் படுவர் என்ற திட்டத்தை செயற்படுத்த பிரான்ஸ் அரசு முடிவெடுத்துள்ளது. ஆயினும் இந்த முடிவுக்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். பிரிட்டனில் கடந்த ஒரு நாளில் 183 037 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை ஒமிக்ரோன் பரவலால் சர்வதேச அளவில் விமானப் பயணங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த 4 நாட்களில் மாத்திரம் சுமார் 11 500 இற்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதனால் உலகம் முழுதும் பல விமான சேவை நிறுவனங்கள் கடும் இழப்பைச் சந்தித்து வருவதுடன், தற்போது சேவையில் இருக்கும் விமானப் பணியாளர்களது பனிச்சுமையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.