வியாழக்கிழமை உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடெனும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.
இதன் போது உக்ரைன் மீது ரஷ்யா மேலதிக ஆதிக்கத்தை மேற்கொண்டால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உறுதியான நிலைப்பாட்டுடன் கூடிய முடிவுகளை நிச்சயம் எடுக்கும் என பைடென் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை விடுத்துள்ளது.
மேலும் உக்ரைன் விடயத்தில் அதிகரித்துள்ள பதற்றத்தைத் தணிக்குமாறும் அதிபர் புதினுக்கு பைடென் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிய வருகின்றது. இதேவேளை 3 முக்கிய உபகரணங்களுடன் கூடிய செய்மதி ஒன்றை பீனிக்ஸ் என்ற ராக்கெட்டு மூலம் ஈரான் விண்ணில் செலுத்தியிருப்பதாக சில செய்திகள் வெளியாகி உள்ள போதும், இந்த செய்மதி வெற்றிகரமாக பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப் பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஈரான் இதற்கு முன்பு விண்ணில் செய்மதிகளை நிலை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரானின் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக வியன்னாவில் 7 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், குறித்த ராக்கெட்டு விண்ணில் செலுத்தப் பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் அமெரிக்காவின் பிரபல ராக்கெட் தயரிப்பு நிறுவனமான எலொன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன செயற்கைக் கோள்கள் தமது விண்வெளி நிலையத்தை மோத நெருங்கியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இணையத் தள சேவை உட்பட பல நோக்கங்களுக்காக விண்ணில் செலுத்த பட்டிருக்கும் ஸ்பேஸ் எக்ஸின் செயற்கைக் கோள்களில் சிலவற்றின் மூலம் இவ்வாறு இரு தடவைகள் தமது விண்வெளி நிலையத்தின் மீது மோதுவது போல் அருகில் பயணித்ததாக சீனா தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 1 ஆம் திகதி மற்றும் ஆக்டோபர் 21 ஆம் திகதிகளில் இச்சம்வங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன் போது பாதுகாப்புக் காரணங்களுக்காக மோதல் தவிர்ப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சீனா பின்பற்றியதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா சபையில் புகார் அளிக்கப் பட்டிருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.