சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது தனது பதவிக் காலம் முடிந்தவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டேர்தே அறிவித்துள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்குத் தான் போட்டியிடுவதை அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கவோ அல்லது பொது மக்கள் விரும்பவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் கருத்துக் கணிப்புக்களை அவதானித்தே துணை அதிபராகும் தகுதி தனக்கில்லை எனத் தெரிந்து கொண்டதாகவும் டுட்டேர்தே தெரிவித்துள்ளார். இதனால் பொது மக்கள் விருப்பத்துக்கு இணங்கத் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று டுட்டேர்தே உறுதிப் படுத்தியுள்ளார். 2016 ஆமாண்டு முதல் பிலிப்பைன்ஸ் அதிபராகப் பணியாற்றி வந்த டுட்டேர்தே போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தைக் கையாண்ட போது பல மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களையும், பல அரசியல் சர்ச்சைகளையும் எதிர் கொண்டவர் ஆவார்.
இதேவேளை பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒருவர் அங்கு ஒரு முறை மாத்திரமே அதுவும் 6 ஆண்டுகளுக்கே அதிபர் பதவியை வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.