இஸ்ரேலும், மொரோக்கோவும் தமக்கிடையேயான உறவை சுமுகப் படுத்தி ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், இரு இஸ்ரேலி ஏர்லைன் சேவைகள் மொரோக்கோவுக்கான தமது முதல் வர்த்தக விமானப் பயணங்களை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தியுள்ளன.
டெல் அவிவ் இலிருந்து மர்ரகேஹ் இற்கு 100 இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுடன் முதல் விமானமும், இதற்கு சில மணித்தியாலங்கள் முன்பு இஸ்ரேலி தேசிய EL AL கேரியர் விமானமும் அதே பாதையில் தனது விமானத்தையும் செலுத்தியுள்ளன. இது குறித்து இஸ்ரேலின் சுற்றுலாத் துறை அமைச்சர் யோயேல் ராஷ்வோஷோவ் கூறுகையில், இந்தப் புதிய விமான சேவைகள் மூலம் இஸ்ரேலுக்கும், மொரோக்கோவுக்கும் இடையேயான சுற்றுலா, வர்த்தகம், பொருளாதார நல்லுறவு, இராஜதந்திர இணக்கங்கள் ஆகியவை ஏற்படும் என்றுள்ளார்.
நீண்ட காலம் நிலவிய பிணக்குகள் நீங்க ஏதுவாக அமெரிக்கா மத்தியஸ்தம் வகித்த 'ஆப்ரஹாம் இணக்கம்' என்ற இணக்கம் மூலம் 2020 ஆமாண்டு இஸ்ரேலும், மொரோக்கோவும் தமக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தியிருந்தன. இதன் மூலம் ஏற்கனவே இஸ்ரேலுடன் நல்லுறவில் இருக்கும் 3 அரபு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரெயின், சூடான் ஆகியவற்றுடன் 4 ஆவது நாடாக மொரோக்கோவும் இணைந்துள்ளது.
மேற்கு சஹாராவின் ஒரு பகுதியைத் தனது என்று மொரோக்க்கோ சொந்தம் கொண்டாடிய 1975 ஆமாண்டு யாப்பை ஐ.நா இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் இஸ்ரேலுடன் உறவு புதுப்பிக்கப் பட்ட போது மேற்கு சஹாராவில் மொரோக்கோ சொந்தம் கொண்டாடும் பகுதி இனை அங்கீகரிக்கவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அதிபர் ஜோ பைடெனின் நிர்வாகம் இந்த அங்கீகாரம் தொடர்பில் மீள் பரிசோதனை செய்யப் படும் என்று அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருக்கும் பல யூதர்களுக்கு மொரோக்கோவில் பூர்வீகம் உள்ளது. இன்னமும் மொரோக்கோவில் சில ஆயிரக் கணக்கான யூதர்களைக் கொண்ட ஒரு சிறிய யூத சமூகம் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இஸ்ரேலுக்கும், மொரோக்கோவுக்கும் இடையே கிழமைக்கு குறைந்தது 5 விமானப் பயணங்களை நிகழ்த்த El AL விமான சேவை நிறுவனம் முடிவெடுத்துள்ளது.