தமது நாட்டில் இதுவரை தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளாத குடி மக்களாலும், பல மடங்கு வேகத்துடனும், வீரியத்துடனும் பரவி வரும் டெல்டா வைரஸ் மாறுபாட்டாலும் தற்போது நாம் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல் அமெரிக்கா, கோவிட் இனைக் கையாள்வதில் மீண்டும் தவறான பாதைக்கு இட்டு செல்கிறது என அமெரிக்காவின் மூத்த தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபௌசி தெரிவித்துள்ளார்.
இதனால் தான் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் அந்தோனி பவுசி கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவில் தடுப்பு மருந்து போட்டுக் கொண்டவர்கள் மீண்டும் முகக் கவசம் போட்டுக் கொள்வது அவசியமா என்பது தொடர்பில் அரசின் முன்னணி சுகாதார அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும், ஏற்கனவே தடுப்பூசிகள் போட்டும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஒடுக்கப் பட்டவர்ளுக்கு பூஸ்டர் ஷாட்ஸ் என்ற 3 ஆவது தடுப்பூசி போடுவது பரிந்துரைக்கப் படுவதாகவும் பௌசி கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடெனின் பிரதான மருத்துவ ஆலோசகரும் அந்தோனி பௌசி ஆவார். அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பான CDC இன் தகவல் படி அமெரிக்க சனத்தொகையில் 49% வீதமானவர்கள் அதாவது 163 மில்லியன் மக்கள் பூரணமாக கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜேர்மனியில் இனி வரும் மாதங்களில் கோவிட் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் படலாம் என சேன்சலர் ஏஞ்சலா மேர்கெலின் பிரதான அதிகாரியான ஹெல்கே பிராவுன் தெரிவித்துள்ளார்.
இவர் உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த செவ்வியில் கோவிட்-19 தொடர்பான இன்னொரு லாக்டவுனைத் தான் ஜேர்மனியில் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஜேர்மனியில் மொத்த சனத்தொகையில் 60% வீதத்துக்கும் அதிகமானவர்கள் குறைந்தது 1 தடுப்பூசியையேனும், 49% வீதத்துக்கும் அதிகமானவர்கள் 2 தடுப்பூசிகளையும் இதுவரை போட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.