ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் கிட்டத்தட்ட 20 வருட யுத்தத்தின் பின்னர் விரைவில் ஆகஸ்ட் 31 ஆம் திகதியளவில் முற்று முழுதாக வாபஸ் பெறவுள்ள நிலையில் அங்கு தலிபான்களின் கை மிகவும் ஓங்கியுள்ளது.
ஆப்கானில் உள்ள 400 இற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அரைப் பங்கை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக நம்பகமான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஆப்கானின் 80% வீதமான நிலப்பரப்பைத் தாம் கைப்பற்றி விட்டதாகத் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு பக்கம் கட்டார் தலைநகர் டோஹாவில் ஆப்கான் இராணுவத்துக்கும், தலிபான்களுக்கும் இடையே 2020 முதல் இடம்பெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவித முன்னேற்றமும் இன்றித் தொடர்கின்றது. சமீபத்தில் தலிபான்களின் பேச்சாளர் அளித்த பேட்டியில், ஆப்கான் பிரதமர் அஷ்ரப் கனி பதவி விலகும் வரை தாக்குதல்கள் தொடரும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதிகரித்து வரும் தலிபான்களது தாக்குதல்களைக் கட்டுப் படுத்த காபூல் தவிர்த்து ஆப்கானின் பல மாகாணங்களில் இரவு 10 மணி முதல் 4 மணி வரை ஆப்கான் அரசால் ஊரடங்கு அமுல் படுத்தப் பட்டுள்ளது.
மறுபுறம் தலிபான்களோ நகரங்களில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்க மாட்டோம் என்றும் செய்தியாளர்களுக்கும் பாதுகாப்பளிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். சமூக வலைத் தளங்களில் வெளியாகி வரும் பல வீடியோக்களில் தலிபான்கள் அதி நவீன ஆயுதங்களுடன் பயிற்சி பெறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதும், இந்த அதிநவீன ஆயுதங்கள் குறிப்பாக சேட்டிலைட் போன்களில் அமெரிக்க அரசின் உடமை என்ற முத்திரை தென்படுவதாக ஸ்கை நியூஸ் தெரிவித்திருப்பதும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆப்கானில் பல இடங்களில் தலிபான்களிடம் இராணுவம் சரணடைந்து வருவதாகவும், இதனால் அவர்கள் வசமிருந்த அமெரிக்க ஆயுதங்கள் தலிபான்கள் வசமாகுவதாகவும் இது தலிபான்களை மிகவும் வலுப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. இதனால் ஆப்கானிஸ்தான் விரைவில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியில் சிக்க நேரிடுமோ என சர்வதேச சமூகம் சந்தேகிக்கிறது. இதை ஊர்ஜிதப் படுத்தும் விதத்தில் இன்னும் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி அமையலாம் என அமெரிக்கப் புலனாய்வு துறை அறிக்கை அளித்துள்ளதாக ஸ்கை நியூஸ் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.