சீனாவையும், தைவானையும் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்ற வலுவான புயல் தற்போது ஜப்பானை அச்சுறுத்தி வருகின்றது.
ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்களை இப்புயல் கடுமையாகத் தாக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இப்புயல் ஜப்பானைக் கரையைக் கடக்கும் போது மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.
இதன் போது ஹிரோஷிமா, ஷிமனே மற்றும் எஹிம் போன்ற இடங்களில் கடும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இப்பகுதிகளில் இருந்து 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர். புயல் அச்சுறுத்தலால் ஜப்பானின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் பல நூற்றுக் கணக்கான விமானப் பயணங்கள் ரத்தாகியுள்ளன.
இதேவேளை மியான்மாரின் புர்மா என்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 5.2 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. இதன் போது மோசமான சேதங்களோ, உயிரிழப்புக்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.