செவ்வாய் கிரகத்தின் தரையில் ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற ரோபோ வண்டியில் பாறை துகள்களை சேகரிக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப் பட்டுள்ள 7 அடி நீளமான ரோபோ கையில் துளையிடுவதற்கான கருவி மற்றும் பாறை மண் மாதிரிகளை சேகரிக்கும் கருவி என்பன பொருத்தப் பட்டுள்ளன.
இவ்வாறு சேகரிக்கப் படும் மாதிரிகளை சேமித்து வைக்கவென 43 டைட்டேனியம் குழாய்களும் உள்ளன. அண்மையில் முதல் தடவையாக தரையில் வெற்றிகரமாகத் துளையிடப் பட்ட போதும், அதில் இருந்து பாறைகளை எடுத்து குழாயில் அடைத்து மூடுவதற்கான முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் பெர்சரவரன்ஸ் ரோவரின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்து இப்பிரச்சினையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
மறுபுறம் செவ்வாய்க் கிரகத்தின் சூழலில் வசிப்பதற்கான வருங்காலத் திட்டத்துக்கு பயிற்சி அளிக்க அமெரிக்க மக்களுக்கு மட்டுமான விண்ணப்பங்களை பெறும் பணியை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெள்ளிக் கிழமை முதல் தொடங்கியுள்ளது. 4 பேரைத் தெரிவு செய்யும் இந்தத் திட்டத்தின் முதற் கட்டமாக தேர்வு செய்யப் படுபவர்களுக்கு ஹுஸ்டன் அருகே பாலைவனப் பகுதியில் ஒரு மணற் குன்றின் மீது உருவாக்கப் பட்டுள்ள செவ்வாய்க் கிரகத்துக்கு ஒப்பான சூழலைக் கொண்ட சிமுயூலேட்டரில் பயிற்சி அளிக்கப் படவுள்ளது.