ஆப்கானிஸ்தான் அண்மைய் நிலவரம், பாதுகாப்பு குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஆஸ்டின், பாகிஸ்தான் இராணுவத் தலைவர் ஜெனரல் கமார் ஜாவெட் பஜ்வா உடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக திங்கட்கிழமை பெண்டகன் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஆப்கானில் மோசமடைந்து வரும் நிலவரம் குறித்து ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் இணைந்த முத்தரப்புடன் அமெரிக்கா விவாதித்து வருகின்றது. இந்நிலையில் ஆப்கான் மண்ணில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை குறித்தே அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் இராணுவ தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆப்கான் மண்ணில் தலிபான்களால் அதிகளவு யுத்தக் குற்றங்கள் இழைக்கப் படுவதாக பல மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த 72 மணித்தியாலத்தில் சுமார் 27 சிறுவர்கள் கொல்லப் பட்டும் 137 பேர் காயமடைந்தும் இருப்பதாக திங்கட்கிழமை யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.