உலகளவில் மிக மோசமாக கோவிட் பெரும் தொற்றினால் பாதிக்கப் பட்ட தெற்காசிய நாடுகளில் ஒன்றான பங்களாதேஷ், உலகின் மிகப் பெரிய தனது அகதிகள் முகாமில் நெருக்கமாக வசித்து வரும் மியான்மாரின் றோஹிங்கியா அகதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது.
சுமார் 850 000 றோஹிங்கியா அகதிகளை உள்ளடக்கிய வங்கதேச அகதிகள் முகாம்களில் இதுவரை சுமார் 2600 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதாகவும், 29 பேர் இதனால் உயிரிழந்ததாகவும் கணிக்கப் பட்ட போதும், உண்மை நிலவரம் சற்று அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் முதற்கட்டமாக இன்னும் 3 நாட்களில் இந்த முகாம்களில் உள்ள 55 வயதுக்கு மேற்பட்ட 48 000 அகதிகளுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்து செலுத்தப் படவுள்ளதாக வங்கதேச சுகாதாரத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலகின் சனச் செறிவு மிக்க சிறிய நாடுகளில் ஒன்றான பங்களாதேஷில் கோவிட் பெரும்தொற்று சமயத்தில் றோஹிங்கியா அகதிகள் உட்பட சுமார் 169 மில்லியன் மக்கள் லாக்டவுனில் தள்ளப் பட்டனர். தற்போது இந்தியாவில் அறியப் பட்ட டெல்டா திரிபின் தாக்கத்தால் மோசமாகப் பாதிக்கப் பட்டு வரும் பங்களாதேஷில் இதுவரை 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொற்றுக்கு ஆளாகியும், 23 000 பேர் கொல்லப் பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.