ஜூலை 11 ஆம் திகதி முதல் கியூபாவில் கம்யூனிச அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
கோவிட் 19 பெரும் தொற்று அதிகரிப்புக்கு மத்தியில், அங்கு உணவு, மருந்து உட்பட அத்தியவாசியப் பொருட்களுக்கான விலைவாசி கடுமையாக உயர்ந்ததை எதிர்த்தே இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
கியூப கம்யூனிச அரச சட்டத்தின் படி அனுமதி பெறாமல், அங்கீகாரம் கிடைக்காமல் நடத்தப் படும் போராட்டங்கள் சட்ட விரோதமாகும். எனவே அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் 1000 கணக்கான மக்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். எனினும் தற்போது உணவு மற்றும் மருந்து பொருட்கள் மீதான சுங்க வரிகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக கியூபா அரசு அறிவித்துள்ளதால், கடும் உணவுப் பஞ்சம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் அவதிப் பட்டு வந்த மக்கள் தற்போது சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மக்கள் போராட்டத்தால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச எல்லைகளை கியூபா திறந்து விட்டுள்ளதுடன் அங்கு யார் வேண்டுமானாலும் உணவு, மருந்துகளைக் கொண்டு வரலாம் என்றும் அதற்கு வரிவிதிப்போ, சோதனையோ கிடையாது என்றும் அறிவித்துள்ளது. கியூபா இந்தளவுக்கு இறங்கி வந்து பரிசோதனைகளை ரத்து செய்து எல்லைகளைத் திறந்து விட்டிருப்பது என்பது அதன் அரசின் வலிமையை இழந்து விட்டதற்கு சமன் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கியூபாவில் 1950 களில் கம்யூனிச அரசின் சர்வாதிகாரம் தொடங்கியதில் இருந்து முதன் முதலாக இடம்பெறும் மிகப் பாரியளவிலான மக்கள் ஆர்ப்பாட்டம் தற்போது நிகழ்ந்து வரும் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆளும் கம்யூனிச அரசுக்கு எதிராக இதுவரை இல்லாத விதத்தில் பொது மக்களைத் தூண்டி விட்டிருப்பதன் பின்னால் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க சக்திகள் உள்ளன என கியூப அரசு குற்றம் சாட்டியும் உள்ளது.