முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து அமெரிக்கர்களும் ஆகஸ்ட் மத்தியில் இருந்து கனடாவுக்குள் அனுமதிக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடேயோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
மேலும் செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து முழுமையான தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட சர்வதேசத்தை சேர்ந்த எந்தவொரு நபராக இருந்தாலும் அவரையும் தமது நாட்டுக்கு வரவேற்கவும் தயாராகி வருவதாக ஜஸ்ட்டின் ட்ருடேயோ மேலும் தெரிவித்துள்ளார். கனடாவில் தற்போதைய தொற்று நோயியல் நிலைமையை அனைத்து மாகாணத் தலைவர்கள் மற்றும் மருத்துவ ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பின்பே பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடேயோ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மேலும் G20 அமைப்பை சேர்ந்த நாடுகளில் தனது நாட்டு மக்களுக்கு அதிக தடுப்பூசிகள் அளித்த நாடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் கனடா இருப்பதை ஜஸ்ட்டின் ட்ருடேயோ சுட்டிக் காட்டியுள்ளார். கனடாவின் சனத்தொகையில் தற்போது கிட்டத்தட்ட 80% வீதமானவர்கள் முதலாவது டோஸையும், 50% வீதமானவர்கள் இரண்டு டோசேஜ்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதேவேளை ஆசிய நாடுகளில் கொரோனாவின் புதிய பிறழ்வான டெல்டா வகை வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சீன அரசு தனது மக்களுக்குப் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதன்படி சீனாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பள்ளிகள், மருத்துவ மனைகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.