பிரேசில் அதிபர் பொல்சனாரோ 2018 ஆமாண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப் பட்ட சம்பவத்தின் பின் அவரது உடல்நிலை மிகவும் சீரற்றது.
மேலும் அவருக்குப் பல அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப் பட்டிருந்தன. உலகளவில் கோவிட்-19 பெரும் தொற்றால் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த (5 இலட்சம்) 2 ஆவது நாடான பிரேசிலில் அதன் அதிபர் பொல்சனாரோ கோவிட் தொற்றைக் கட்டுப் படுத்த ஆரம்பம் முதலே உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் தடுப்பூசிகள் கொள்வனவில் கூட ஊழல் இடம்பெற்றதாகவும் குற்றம் சாட்டி போராட்டங்கள் வலுப்பெற்றன. இந்நிலையில் அதிபர் பொல்சனாரோவும் கோவிட் தொற்றுக்கு ஆளாகி மீண்டிருந்தார். கடந்த 10 நாட்களாக தொடர் விக்கல் அவஸ்தையால் பாதிக்கப் பட்ட பொல்சனாரோ பிரேசிலியா இராணுவ மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றார். இடையே தனது டுவிட்டர் பக்கத்தில் கடவுள் விருப்பப் படி விரைவில் திரும்ப வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் பொல்சனாராவோக்கு குடலில் அடைப்பு இருப்பதாகவும் ஆனால் உடனடி அறுவை சிகிச்சை அவருக்குத் தேவைப் படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேசில் அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் அவர் திடீரென மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.