இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பந்து வீச்சில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தலாக பந்து வீச சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
வெஸ்ட் இண்டீஸை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.
ஒரு நாள் தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத இருக்கின்றன.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 16ம் திகதி கொல்கத்தாவில் நடக்கவிருக்கிறது.