வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாக சைவப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்த முருகப்பெருமானும், பரமேஸ்வரனின் நெற்றிப்பொறிகளிலிருந்து ஆறு குழந்தைகளா அவதரித்தவன். அன்னை பராசக்தியின் அணைப்பில் ஆறுமுகனாக உருப்பெற்றவன் ஸ்கந்தப் பெருமான்.
முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.
வைகாசி விசாக நட்சத்திரத்திற்கு மேலும் சிறப்புக்கள் உண்டு. எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைப்பதாக நம்பிக்கையுண்டு.
மகாபாரதத்தின் 'வில்' வீரான அர்ஜுனன் பாசுபத ஆயுத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும். சிவபெருமான் மழு ஏந்தி திருமழப்பாடியில் திருநடனம் புரிந்ததும் இந்நாளே. பன்னிருஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.
வான்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் இராம-லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவதுடன், குமாரசம்பவம் எனும் இந்த மகிமையை, கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார். இதனை பின்பற்றியே வடமொழிக் கவிஞரான காளிதாசர் முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் கூறும் நூலிற்கு குமார சம்பவம் என்றும் பெயரிட்டுள்ளார்.
வைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி. அதனால் வைகாசி விசாகத்தில் கோயில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன. இளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச் சிறுபருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி உற்சவம் (வெப்பம் தணிக்கும் விழா) நடத்தப்படுகிறது.
கௌதம புத்தரான சித்தார்த்தன், பிறந்த நாளும், அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி பௌர்ணமி என்று கொண்டாடப்படுகிறது. இலங்கையில் பௌத்த மக்கள் இதனை புண்ணிய தினமாகக் கொண்டாடுவார்கள்.
ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளினை ஒட்டி பல சைவ ஆலயங்களிலும் மஹோற்சவம் நடைபெறுவதும் வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக அவையெல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடியாத போதும், முடிந்தவர்கள் ஆலயங்களிலும், முடியாதவர்கள் வீடுகளில் இருந்த வண்ணமும் போற்றுதல் செய்து கொள்வோம்.