தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், வரும் 5ம் திகதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. குடமுழுக்கிற்கான பூர்வாங்க கிரிகைகள் கடந்த 27-ம் திகதிஆரம்பமாகின. 23 ஆண்டுகளின் பின்னதாக நடைபெறும் இக் கும்பாபிஷேகத்திற்கான கிரிகைகளில், திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் ஆகியன இன்று இடம்பெற்றன.
நேற்றைய தினத்தில், கணபதிஹோமம் நவக்கிரகஹோமம் தனபூஜை பிரம்மசாரி பூஜை கன்யா பூஜை சுவாஸினிபூஜை தம்பதிபூஜை ஆகியன சிறப்புற நிகழ்ந்தன.
குடமுழுக்கு விழாவின் நிகழ்வுகளைக் காண, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் வரத் தொடங்கியுள்ள நிலையில், கோவில் வளாகம் முழுவதும், பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் 150க்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டு, கோவிலின் எதிரே அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் அனைவரும் மூன்றடுக்கு சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வெளியிடங்களில் இருந்து வரக் கூடிய பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்களும், காவல் கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, இரும்பினாலான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.