இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சைப் பெருவுடையார் கோவில் மகாகும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றுவரும் கும்பாபிஷேக கிரிகைள், யாகபூஜைகளின் நிறைவாக, இன்று காலை 7 மணியளவில் மகாபூர்ணாஹுதி, தீபாராதனை, நடைபெற்று, காலை 7.25 மணியளவில் திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள், கோபுரங்களின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அனைத்துக் கோபுரங்களிலும், சிவாச்சார்யர்கள் வேத மந்திரங்கள் ஓத, ஓதுவார்கள் திருமுறை பாட, தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் பாராயணங்கள் செய்த பின்னர், கோயிலை சூழவிருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என உரக்க குரலெழுப்பி பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர். ராஜகோபுரத்தை தொடர்ந்து விநாயகர், முருகன், பெரிய நாயகி, அம்மன், வராகி, சண்டிகேஸ்வரர் விமானங்களுக்கு குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கைத் தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலில் மூலவர்களுக்கும், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.