free website hit counter

தைப்பூசத் திருநாளும் தமிழ் மரபும் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சைவ சமயத்தில் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற திருநாள்களில் ஒன்றாக தைப்பூசத் திருநாள் விளங்குகிறது. தமிழ் மாதமான தை மாதத்தில், பூசம் நட்சத்திரம் கூடும் புனித நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.

மாதந்தோறும் பூச  நட்சத்திரம் வந்தாலும், பெüர்ணமியோடு பூசநட்சத்திரம் கூடி வரும்   இந்த நாள் பல்வேறு சிறப்புக்களால் நிறைந்தது என்றாலும், ஞானமே உருவான அருள்மிகு முருகப்பெருமான் மனிதகுலத்திற்கு தெய்வீக ஞானத்தை அருளிய திருநாளாகக் கருதப்படுகிறது.

சிவபெருமானும் பார்வதி தேவியும் உலக நலனுக்காக, தீமையை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் முருகப்பெருமானுக்கு வேல் எனும் தெய்வீக ஆயுதத்தை அளித்த தினமே தைப்பூசம். அந்த வேல், அகந்தை, அறியாமை, ஆணவம் போன்ற தீய குணங்களை அழிக்கும் ஞான ஆயுதமாக சைவ சமயத்தில் போற்றப்படுகிறது. “வேல் முருகா, வேல்!” என்ற முழக்கம் பக்தர்களின் உள்ளத்தில் ஞான ஒளியை ஏற்றுகிறது.

தைப்பூசத்தின் புராணப் பின்னணி

சைவ புராணங்களின் படி, தேவர்களை துன்புறுத்திய சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களின் கொடுமை அதிகரித்தபோது, உலக நலனுக்காக சிவபெருமானின் சக்தியான பார்வதி தேவியிடமிருந்து தோன்றியவரே முருகப்பெருமான். அசுர சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட, பார்வதி தேவி தமது சக்தியை ஒருங்கிணைத்து வேல் எனும் தெய்வீக ஆயுதத்தை முருகனுக்கு அளித்த தினமே தைப்பூசத் திருநாள் ஆகும்.

இந்த வேல் வெறும் போராயுதமல்ல; அது ஞானத்தின் சின்னம். சைவ சித்தாந்தத்தின் படி, மனிதனை பிணைக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய முப்பெரும் மலங்களை அழிக்கும் சக்தியே வேல். எனவே முருகன் அசுரனை வெல்வது என்பது, மனிதன் தன் அகத்திலுள்ள அறியாமையை வெல்வதையே குறிக்கிறது.

முருகன் – ஞானாசிரியர்

சைவ மரபில் முருகப்பெருமான் ஞான குருவாக மதிக்கப்படுகிறார். “தந்தைக்கு உபதேசம் செய்த தெய்வம்” என்ற பெருமை முருகனுக்கே உரியது. பிரணவ மந்திரத்தின் பொருளை சிவபெருமானுக்கே உபதேசித்த சுவாமிநாதன் என்ற வடிவம், முருகனின் ஞானப் பெருமையை எடுத்துரைக்கிறது.தைப்பூசம், அந்த ஞான வெளிப்பாட்டை நினைவூட்டும் நாள் ஆகும்.

தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் விரதம் மேற்கொள்வது ஒரு முக்கிய சமய நடைமுறை. உடல் தூய்மையுடன் மட்டுமல்லாமல், மனத் தூய்மையையும் பேணுவது இவ்விரதத்தின் மைய நோக்கமாகும். சைவ நெறிக்கேற்ப சத்தியம், அஹிம்சை, அடக்கம், பொறுமை போன்ற பண்புகளை கடைப்பிடித்து, முருக நாமம் ஜபிப்பது வழக்கமாக உள்ளது.

காவடி வழிபாடு – ஆன்மீக ஒழுக்கத்தின் வெளிப்பாடு

தைப்பூசத்தின் அடையாளமாக விளங்குவது காவடி வழிபாடு. புராணக் கதையின் படி, முருகப்பெருமானின் அடியாரான இடும்பன், சிவபெருமானின் கட்டளைக்கிணங்க, கைலாய மலையிலிருந்து இரண்டு மலைகளை காவடியாகச் சுமந்து வந்தார். பின்னர், பழனியில் முருகன் குழந்தை வடிவில் இடும்பனைத் தடுத்து நிறுத்தி, அவனின் அகந்தையை அகற்றிய பின்பு அருள்புரிந்தார். அதுவே காவடி வழிபாட்டின் தோற்றமாகக் கருதப்படுகிறது.

காவடி சுமப்பது உடல் வேதனையைக் காட்டிலும், அகந்தையைச் சுமந்து அதை இறைவனிடம் ஒப்படைக்கும் துறவறப் பயணம் ஆகும். அலகு குத்துதல், பால் காவடி, புஷ்ப காவடி போன்றவை உடலை அடக்கி மனதை உயர்த்தும் சைவ சாதனைகளாகப் பார்க்கப்படுகின்றன.

சமய-கலாச்சார ஒருமைப்பாடு

தைப்பூசத் திருநாள், தனிநபர் வழிபாட்டைத் தாண்டி சமூக ஆன்மீக விழாவாகவும் மாறியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொறீசியஸ்,  போன்ற நாடுகளில் வாழும் தமிழ்ச் சைவ மக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை போன்ற அறுபடை வீடுகளில் தைப்பூசம் தனிச்சிறப்புடன் நடைபெறுகிறது.

தைப்பூசம், ஈழத்தில் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமன்றி, புதிய தொடக்க நிகழ்வுகளான அன்னப்பிராசனம், வித்தியாரம்பம், வியாபாரத்தில் புதுக் கணக்கு தொடங்கல், முதலாய மங்கல வைபங்களுக்கும் உகந்த நாளாக முக்கியத்துவம் பெறுகிறது.  இவைகளினால், சமூக, சமய நம்பிக்கை மற்றும் விவசாய பண்புக்களின் இணைவேந்தலால், தைப்பூசம் ஈழத் தமிழர்களிடத்திலும், ஆன்மீக,  பண்பாட்டு வழக்கங்களின் தொடர்ச்சியாக,  குடும்பங்களிலும் சமூகத்திலும், புலம்பெயர்ந்து உலகெங்கிலும் வாழும் ஈழத்தவர்கள், மத்தியிலும்,  தொடர்ச்சியாக வாழ்கின்றன. 

திருமயிலையில் சாம்பலாகிப்போன பூம்பாவையை எழுப்புதற்கு திருஙானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடுகையில்,  "நெய்ப்பூசம் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்' எனத் தைப்பூசத் திருநாளின் சிறப்பை முன்னிறுத்திப் பாடுகின்றார்.

தைப்பூசமும்> பொங்கல் போன்ற அறுவடை திருநாள்களும், முருகப்பெருமான் வழிபாடு, இயற்கைக்கு நன்றி, சமூக ஒன்றுமை, மற்றும் புதிய ஆரம்பங்களுக்கு ஆன்மீக உறுதியாக> தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத்திலும் புதிய அர்த்தத்தை தருகின்றன. இவை  சைவ சமயத்தின் தத்துவ ஆழத்தையும், உலகெங்கும் வாழும் தமிழரின் பண்பாட்டு மரபினையும் வெளிப்படுத்துகின்றன. இதனாற்தான் தமிழ்மரபு மாதமாகவும் தைத்திங்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula