free website hit counter

நம்பிக்கை !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நம்பிக்கை எப்போது பக்தியாகும் ? சிலவேளைகளில் அது முட்டாள் தனமானதாக் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை மிகுந்த  நம்பிக்கைக்கான ஒரு குட்டிக்கதை பார்க்கலாம். 

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர்.

மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள். அப்பொழுது சூரியபகவான் அசரிரீயாக தோன்றி "வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன். சூரியனான நான் இன்று மாலை மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் தவவலிமையால் அவனை காப்பாற்றுங்கள் என்று  கூறி மறைந்தார். குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார்.

இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர். பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர்ந்தனர். சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை.

சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார். அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்தபடி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது. இதை பார்த்துப் பதை பதைத்த குரு,  " ராஜநாகமே நில்" என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.
குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன்", என்று தடுத்தார். 
இப்பொழுது ராஜநாகம் பேசியது. "வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?" என்று முறையிட்டது.
உடனே குரு "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை. சரி, சற்று பொறு! நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய்." என்று கூறி, ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர்.
தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி சிறிதும் அசையாமல் படுத்த படியே இருந்தான்.
சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார். ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது. 
குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார். சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர்.
அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல் "குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" என்று கேட்டான்.
குரு புன்னகையுடன், "சீடனே! நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய்? உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா?" என்று புன்னகையுடன் கேட்டார். அதற்குச் சீடன், "குருவே என் கழுத்தில் எதோ ஊருவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன்.
இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை." என்று கூறி பணிந்து நின்றான். குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார்.
இதனை நம் முன்னோர் " நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல.." என்றார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula