free website hit counter

அவளும் அவளும் – பகுதி 3

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

 

அவளும் அவளும் – பகுதி 3

அசைந்தேன். அடியில் உதிர்ந்தன இலைகள்.

நினைவழிந்து வீட்டினுள் கிடப்பதாகச் சொல்லப்படும் ராசம், என் நினைவில் இருந்தாள்.

“வேம்பி..!” அவள் அழைப்பின் மொழி வேணிக்கும் கேட்டிருக்க வேண்டும். பேச்சின்றி, பெரும் மூச்சோடு கிடந்த ராசத்தின் சுவாசிப்பில் அவள் அதனைக் கேட்டிருக்க வேண்டும். ஈரத்துணியால் இராசத்தின் முகம் துடைத்து, நெற்றியில் விபூதிக் கோடிட்ட பின் சற்று எட்ட நின்று அழகு பார்த்திருப்பாள் வேணி. அப்போது அவள் அதனைக் கேட்டிருக்கக் கூடும்.ராசத்தை அழகாகக் காண்பதில் வேணிக்கு எப்போதும் ஆனந்தம்.

மாலை என்றால் முகம் கழுவி, தலைமுடித்து, விபூதியால் நெற்றியில் கோடிட்டு, முற்றத்தில் நின்று “ அம்மாளாச்சி..! “ எனக் கையெடுத்துக் கும்பிடுகையில், வயதின் மூப்பை மீறிய அவள் அழகு வெளிப்படும். அதனைப் பார்த்து ரசிப்பாள் வேணி.

“ அண்ணா ! அம்மான்ர அலுவல் எல்லாம் பாத்தாச்சு. நாளைக்கு காலையில வாறன். ஏதும் அவசரமென்டா என்ர ‘ செல் நம்பருக்கு ‘ அடியுங்கோ….“
“ம்..” என்றவன் சற்றுப் பொறு எனக் கைகளால் சைகை செய்தான்.

காற்சட்டைப் பையிலிருந்த பர்ஸினைப் பிரித்து, சில நோட்டுக்களை எடுத்து நீட்டினான். அவைகளில் தெரிந்த எண்களை , எட்ட இருந்த செல்லத்துரை மாஸ்டரின் விழித்திரைகள் ஆயிரங்களாகப் பதிவு செய்தன.

“இப்ப வேணாம் ..!. எனக்கு வேணுமென்டா வேற யாருட்ட கேட்பேன். அம்மாட்டத்தானே.. இனி…..” ராசத்தின் பரிவும், பண்பும் அவள் நினைவில் வந்திருக்க வேண்டும். குரல் தழுதழுத்து விக்கித்தாள்.

முகுந்தன் நீட்டிய கைகளை மடக்கிக் கொண்டான்.இவை எதையும் மாஸ்டர் ரசிக்கவில்லை. குறிப்பாக வேணி " அண்ணா ! " என விழித்தது அறவே பிடிக்கவில்லை என்பது அவர் முகத்தில் கோணியது.

“வாறன்..” எனச் சொல்லிப் போகப் புறப்பட்டாள் வேணி.

பக்கத்தில் கிடந்த அவளது செருப்புக்களைக் காலில் மாட்டிக் கொண்டு பார்த்தாள். என்னைப் பார்க்கிறாளா…? பிறவுணியைப் பார்க்கிறாளா ?
தன்னைப் பார்ப்பதாக எண்ணி, பிறவுணி எழுந்து சோம்பல் முறித்தது. இராசத்தின் மௌன அழைப்பின் குரலை அவள் கேட்டிருப்பாள். அதனால் என்னைப் பார்த்தாள் என எண்ணிக் கொண்டேன். ராசம் வருகிறாளா என வீட்டுப் பக்கம் பார்த்த பிறவுணி, ஏதோ புரிந்தது போல் வேணியின் பின்னால் நடந்தது.

மங்கிய மாலையை, இருள் ஆக்கிரமிப்புச் செய்ய, ஏற்றப்பட்ட விளக்குகள், தம் எதிர்ப்பில் இருப்பை ஒளிர்ந்தன.
கிணற்றடியில் முகங்கழுவிய முகுந்தன், தலைவாசல் வீட்டின் முன் அறையில் கிடந்த தாயிடம் சென்றான்.

“காதலே..காதேல....” மேசையில் கிடந்த முகுந்தனின் கைபேசி பாடியது. அதன் முகத்திரையில் பெண்ணின் முகமொன்று தோன்றியது
செல்லத்துரை மாஸ்டர் தலையை நீட்டி உயர்த்தி தெரிந்து கொள்ள முயன்றார்.

அது சாருவின் முகம். சாருவை எனக்குத் தெரியும்.

வேகமாக வந்த முகுந்தன், காதுகளில் அணைக்க, சாரு கிசுகிசுத்தாள். மாஸ்டர் இருளை ஆராய்ந்தார்.

அணைத்த போனை மேசையில் வைத்துத் திரும்பிய முகுந்தனைப் பார்த்து,
“ ஆரு மனுசியோ..? ”
“ம்..”
என்ன பேசினாள் என்பதை அறியும் ஆவல் இருந்தாலும்,
“ சாப்பிடுவமோ…? “ எனக் கேட்டார் செல்லத்துரை மாஸ்டர்.
“இப்பவேயா..?”
“ மாமி புட்டும், முட்டைப் பொரியலும் …”
“இன்டைக்குச் செவ்வாய்க்கிழமை எல்லோ..” மாஸ்டரை இடைமறித்தான் முகுந்தன்.
“ ஓம் ..” எனச் சொன்ன மாஸ்டரின் பார்வையில் ‘ஏன்..?’ எனும் கேள்வி தெரிந்தது.
“இல்ல, செவ்வாய், வெள்ளி, சனியில, மச்சம் சாப்பிடிறதில்ல…”ஏறிட்டார் செல்லத்துரை மாஸ்டர்.

“ அவன் பிள்ளைக்கு ஏழரைச் சனி; நீங்க வேலைக்குப் போறனியள் விரதம் இருக்காட்டியும் மச்சம் சாப்பிடாமல் இருங்கோ….இங்க நான் விரதம் இருக்கிறன்”
போனில் ராசம் சொன்னது ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் செயலாகியிருப்பது முகுந்தனின் அந்தப் பேச்சில் தெரிந்தது.

எனக்குத் இது நன்றாகத் தெரியும். ராசம் எத்தினை தடவை இதே தலைவாசலில்ல இருந்து, முகுந்தனுக்குச் போனில செவ்வாய், வெள்ளி, கவனம் எனச்சொல்லியிருப்பாள். முகுந்தனுக்கு மகன் பிறந்ததிலிருந்து சனியையும் சேர்த்துக் கொண்டாள். ஆனால் ராசத்தின் தம்பியென்றாலும் செல்லத்துரை மாஸ்டர் அதெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

“ அப்ப உனக்கு மாம்பழமும் புட்டும்தான்..வெளிநாடு போயும் நீங்க…” சலித்துக் கொண்ட மாஸ்டர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் மறைந்திருந்த சாப்பாட்டுப் பையை எடுத்து வந்து மேசையில் பரப்பினார். பேப்பர் ஒன்றை விரித்து, மாம்பழத்தின் தோல் சீவத் தொடங்கினார்.

மாம்பழத்தை அவர் கழுவினாரா? என யோசித்தவாறே
“கறுத்தக் கொழும்பானோ..,? ” கேட்டவன் முகுந்தன்.

“இல்ல செம்பாட்டான்…அங்க கிடைக்குமோ..?”

“ஓ.. கிடைக்கும். இங்ச சண்டை நடந்து கொண்டிருக்கேக்க கூட.. அங்க யாழ்ப்பாணத்துக் கறுத்தக் கொழும்பான் கிடைச்சது...”
நம்பமுடியாமல் பார்த்தார் மாஸ்டர்.

“பச்சைத் தோலோட இருந்தா, அது ஆபிரிக்காவால வந்திருந்தாலும் அது யாழ்ப்பாணக் கறுத்தக் கொழும்பான். மஞ்சளா இருந்தா அது பாகிஸ்தான்…” வெளிநாட்டுப் புதினப் புழுகில் விலாசமாய் பேசினான் முகுந்தன். வேடிக்கை கேட்கத் தொடங்கினார் மாஸ்டர்.

“ பூநகரி மொட்டைக் கறுப்பன் அரிசி சாப்பிடிறனியளோ…, அங்க நாங்க அதுதான் சாப்பிடிறனாங்கள். வேகக் கொஞ்சம் லேட்டாகினாலும், உடம்புக்கு நல்லதென்டு மனுசி, ‘கைக்குத்தரிசி’ தேடி வேண்டுவாள் “

உரல் நிறையக் கிடந்த மொட்டக் கறுப்பன் நெல்லும், பெண்கள் தூக்கிப் பதிக்கும் கைகளில் மாறி மாறிச் செல்லும் உலக்கையும், சிந்தி விழும் உமியும், அரிசியும், என காட்சிகளை மனதில் ஓட்டிப்பார்த்தார் மாஸ்டர். ஓட மறுத்தது.

“நல்லாத்தான் ..இருக்கும். பூநகரியில இப்பவும் கையால நெல்லுக் குத்தினமோ…? ” சந்தேகத்தைக் கேள்வியாக்கினார்.

“அதுதான் சொன்னனே. இஞ்ச சண்டை நடக்கேக்கை கூட, அங்க யாழ்ப்பாணத்துக் கறுத்தக் கொழும்பான், முருங்கைக்காய், பூநகரி மொட்டைக் கறுப்பன், எல்லாம் கிடைச்சது…”

அவன் விளங்கி வேடிக்கை கதைக்கிறானா? விளங்காமல் கதைக்கிறானா? மாஸ்டருக்கு விளங்கவில்லை.
“ஓ.. சுவிஸெல்லே.. எல்லாம் கிடைக்கும்.”  என அலுத்துக்கொண்டு, சாப்பிடத் தொடங்கினார்கள்.

“சுவிசென்டில்ல மாமா ! யாழ்ப்பாணத்து ஆட்கள் எங்க இருந்தாலும், விட்டுவிலகாத சிலது இருக்கும். புட்டு, கூழ், அரிசி புடைக்காட்டியும் அடுப்படியில சுளகு என்டு தொடங்கி ஒரு பெரிய லிஸ்ரே இருக்கு..”

மாஸ்ரர் புட்டிலும், பொரியலிலும் மனம் லயித்தார்.

“ மாம்பழமும் பட்டும் நல்லாதான் இருக்கு…கைக்குத்தரிசி மாப்போல…?”

“இல்லை… மெசினில திரிச்சது..” எரிச்சலாக இருந்தது. ஆனால் சிரித்தபடி சொன்னார்.

“ நீ போய் இப்ப எவ்வள காலம்…? “
“15, 16 வருசமாச்சு…”
யாழ்ப்பாணம் குறித்த அவனது காலத் தெளிவினை மனதில் கணக்கிட்டுக் கொண்ட மாஸ்டர், மறுவளத்தால் அவனைக் கணக்கிடத் தொடங்கினார்.

“இப்பதானே திரும்பி வந்திருக்கிறாய்..”
“ஓம். அகதி அந்தஸ்து கிடைச்சதால, நாட்டுக்குத் திரும்பேல்ல..”
“இப்ப..?”
“இப்ப நஷினால்டி எடுத்திட்டன்..”
“அப்ப ஏன் மனுசி, பிள்ளையக் கூட்டி வரேல்ல.. “
“அவைக்கு இன்னும் வரேல்ல. ஆனா அவை வரலாம். மனுசி புது வேலையில சேர்ந்தபடியால லீவு எடுக்கேலாது..”
“ஓ..”
“அங்க இரெண்டுபேரும் வேல செய்தாத்தான் வாழலாம். இப்ப வேலை கிடைக்கிறது சரியான கஸ்ரம். சரியா கஸ்ரப்பட்டுத்தான் இந்த வேலை எடுத்தவா..”
“என்ன ரெஸ்ரோறன்ரிலேயோ..?”
“வயோதிபர் இல்லத்தில..”
“நீ..?”
“நான் ஒரு பக்டரியில..போனதில இருந்து அதிலதான். முதலாளி நல்லவன். அதாலதான் கெதியா நஷனல்ரி கூட எடுக்க முடிஞ்சுது “
“வீடு, வாசல்..?”
“ இப்ப வாடகைக்குத்தான் இருக்கிறம். எங்கட ஆக்கள் கனக்கப் பேர் இப்ப அங்க வீடு வாங்கியிருக்கினம். அவளுக்கும் அது ஒரு பெரிய ஆசை. இந்த வேலைக்கு மாறினதுக்கு அதுவும் ஒரு காரணம்”தான்.”
“பிறகென்ன வேண்டிறதுதானே…?”
“ ஓம் பாத்துக் கொண்டுதான் இருக்கிறம். இன்னும் கொஞ்சம் காசும் தேவை. இந்த வேலைக்கு அவ மாறினதுக்கு அதுவும் ஒரு காரணம்தான். வேலை நிரந்தரமாயிற்றா… நல்ல சம்பளம். “

கைபேசி “க்ளிக்” என்றது. எடுத்துப் பார்த்தான். படம் விரிந்தது.
“இதுதான் பிள்ளை. மனுசியத் தெரியுந்தானே..?” மாஸ்ரிடம் காட்டினான்.
“கோயில்ல நிக்கினமோ..?”
“ஓம். அம்மாவின்ர பேரில அர்ச்சன செய்யப் போயிருக்கினம்..”
“பெரிய கோயில் போல கிடக்கு…என்ன கோயில் ?”
“ஓம் கொஞ்சம் பெரிசுதான். ஆனா இதைவிடப் பெரிய கோயில்களும் இருக்கு. இது பிள்ளையார் கோவில். எங்களுக்குக் கொஞ்சம் தூரம்தான்..” அம்மா சுவிசுக்கு வந்து நிக்கேக்க, அவவ கூட்டிக்கொண்டு போகேக்கதான் நாங்களும் அங்க போகத் தொடங்கினம்…”

“இதுவும் யாழ்ப்பாணத்தான்ர அடையாளம்தான்....பிழைக்கப் போன இடங்களிலயும் கோயில்....” மாஸ்டர் பாராட்டுகிறாரா ? பழிக்கிறாரா?

“ அது என்னவோ, அங்க போய்வாற நாளையில.. ஆறுதலா இருக்கும். அங்கதான் எங்களின்ர கலியாணமும் நடந்தது…”

“வீடு வேண்டக் காசு தேவையென்டா இங்க இருக்கிற சொத்தில ஒன்ட வித்துப் போட்டு, அதில வேண்டலாம்தானே..”
“ அங்க சிட்டிசன் ஆயிட்டா பிறகேன்..இங்க நிலபுலன்..அங்க வேண்டிறதுதானே நியாயம்.” மாஸ்டர் எதுக்கோ அடிபோட்டார்.

“இல்லை மாமா! இங்க இருக்கிற சொத்து எதையும் விக்கிறதில்ல அம்மாவுக்கும் சரி எனக்கும் சரி பெரிசா விருப்பமில்ல…”
“எப்படியிருந்தாலும் பின்னடிக்கு நாங்கள் இங்கதான் வந்திருக்கோணும் என்டு விரும்புறம். சாருவும் அப்படித்தான் சொல்லுறவள். அம்மாவுக்கும் அதுதான் ஆசை..”

“இப்படித்தான்…..நாலைஞ்சு வருசத்தில திரும்பி வந்திருவம் என்டு சொல்லிப் போன ஒருவரும் நானறிய இஞ்ச திரும்பினதக் காணேல்ல.. அதுதான் சொன்னனான். எனக்கென்னடாப்பா… “ கதையின் போக்கினை மாற்றினார் மாஸ்டர். ஆனால் அவரது நோக்கமோ கவனமோ சிதறவில்லையெனத் தெரிந்தது.

போனைக் கையில வேண்டிப் பாரத்த மாஸ்டர்,
“ பக்கத்தில நிக்கிற பெட்டை ஆரு…?”
“அவைதான் இப்ப எங்களுக்கு உதவியா இருக்கிறவை.. இஞ்சை எங்கேயோ ஒரு கிட்டத்தானாம் அவையின்ர இடம். ”
மாஸ்டருக்கு அந்த முகம் எங்கோ நினைவில் இருந்தது. ஞாபகப்படுத்தி பார்க்க முயன்றார்.

சாப்பிட்டு முடிந்த முகுந்தன் தாயைப் பார்க்க மீண்டும் வீட்டினுள் சென்றான்.
சாப்பிட்ட பாத்திரங்களை பைக்குள் பத்திரப்படுத்திய மாஸ்டர், முற்றத்தில் கையலம்பிக் கொண்ட பின், முகுந்தனைத் தேடினார்.

அவன் உள்ளே..
மேசையில் கிடந்த போனினை நோண்டினார். அந்தப் படத்தை மீளவும் பார்த்தார். ஏதோ ஒன்றை உறுதி செய்து கொண்டவர் போல் தனக்குள் தலையசைத்தார்.
திரும்பி வந்த  முகுந்தனைக் கண்டு,  சுதாகரித்துக் கொண்டே,
“கையில என்ன வேப்பிலையே வச்சிருக்கினம்..? “ படத்தைப் பார்த்து இயல்பாகக் கேட்டார் செல்லத்துரை மாஸ்ரர். ஆனால் அந்தக் கேள்வி உண்மை இல்லை.

“ ஓமோம். அதுவும் அம்மாட்ட இருந்து வந்த பழக்கம்தான். அங்க கோயிலுக்குப் போறவேளையிலெல்லாம் ஐயரிட்ட வேப்பமிலை வாங்கி வந்து வீட்டு வாசல்ல கொழுவி விடுவா. காவலாம் என்டு சொல்லுவா…. இப்ப அத என்ர மனுசிம் செய்யுது..”

மாஸ்டரின் நோக்கம் வேப்பிலை அல்ல. அதனால் அவனது பதிலில் அவர் கவனம் கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பதில் எனக்கு இனித்தது.

ராசத்தின் வாழ்க்கையில் என் பார்வை இல்லாது போன நெடுநாட்கள் இரண்டே இரண்டு முறைதான் இதுவரைக்கும் வந்திருக்கின்றன. முகுந்தனைப் பார்க்க அவள் சுவிஸ் போனபொழுதில் மூன்று மாதம். அதற்கு முன் யாழ்ப்பாணமே அல்லோலப்பட்டு இடம்பெயர்ந்து போன பெருந்துயரில் ஆறுமாதம். என் பார்வைக்குள் இல்லாத அந்த நாட்களில் என் நினைவில் அவள் இருந்தாள். ஆம்! என் நினைவில் அவள் இருந்தாள்...

“ஆஸ்பத்திரியில இருக்கும் போதும் கவனிச்சன். இப்பயும் பாத்தனான். அம்மாவின்ர உதடு லேசா அசையிறமாதிரி இருக்கு. அவ என்னவோ சொல்லுறா… ஆனா யாருக்கும் கேட்குதில்ல..” முகுந்தன் மாமனிடம் கேள்வியாக வைத்தான். அதற்கு அவரிடம் பதில் இல்லை.

ஆனால் என்னிடம் உண்டு.  எனக்குக் கேட்கிறது. அவள் உதடுகளின் அசைவில் வெளிப் பிறக்காத அந்த வார்த்தைகளின் உயிர்க்கோப்பினை நான் அறிவேன். அதுதான் ராசத்திற்கும் எனக்குமான உறவு. ஆனால் அது யாருக்கும்  புரியாது…

“வேம்பி.. !”

மெல்லிய காற்றில் சலசலக்கும் இலைகளின் சத்தம் மீறி என்னுள் ஈனமாகக் கேட்கிறது ராசத்தின் குரல்

- தொடரும்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula