காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
வளங்களின் பற்றாக்குறை, காலநிலை அகதிகள், ஆற்றல் மாற்றம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் போன்ற காரணிகள் புவிசார் அரசியலை மறுவடிவமைத்து வருகின்றன. இக்கட்டுரை காலநிலை மாற்றம் உலக அரசியல் அமைப்பில் ஏற்படுத்தும் தாக்கங்களையும், அதன் மூலம் உருவாகும் புதிய அரசியல் இயக்கங்களையும் ஆராய்கிறது.
புவியின் சராசரி வெப்பநிலை உயர்வு, காலநிலை மாறுபாடுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்துவரும் சூழலில், காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முன்னதாக இது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் விவாதங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்று அது தேசிய பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியலின் மையக் கூறாக மாறியுள்ளது. இவ்வாய்வு, காலநிலை மாற்றம் உலக அரசியல் சக்தி சமநிலைகளை எவ்வாறு மாற்றுகிறது என்பதை ஆராய்கிறது.
காலநிலை மாற்றத்தின் நிகழ்விலைவு எதனால் ஏற்படுகிறது ?
பசுமைக் குடில் வாயுக்களின் அதிக உமிழ்வால் பூமியின் வெப்பநிலை உயர்வதே காலநிலை மாற்றத்தின் அடிப்படை காரணமாகும். தொழில்துறை வளர்ச்சி, உயிரிக்கல் எரிபொருள் பயன்பாடு மற்றும் காடுகள் அழிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. இதன் விளைவாக,
கடல் மட்ட உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், வறட்சி மற்றும் வெள்ளம், பருவநிலை மாற்றங்கள், என்பவை உலகளவில் தீவிரமடைந்துள்ளன.

வளங்களின் பற்றாக்குறையும் புவிசார் அரசியலும்
காலநிலை மாற்றம் அடிப்படை வளங்களின் கிடைப்பை குறைக்கும் நிலையில், அவற்றின் மீது அரசியல் கட்டுப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
நீர்வள அரசியல்
நாடுகளுக்கிடையே பகிரப்பட்ட நதிகள் மற்றும் நிலத்தடி நீர்வளங்கள் அரசியல் மோதல்களுக்கு வழிவகுக்கின்றன. வறட்சி அதிகரிப்பதால் நீர்வள மேலாண்மை ஒரு பாதுகாப்பு விவகாரமாக மாறியுள்ளது.
உணவு பாதுகாப்பு
விவசாய உற்பத்தி குறைவதால் உணவுப் பற்றாக்குறை உருவாகி, அரசியல் நிலைமையின்மை மற்றும் சமூக கலவரங்களுக்கு வழிவகுக்கிறது.
ஆற்றல் அரசியல்
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றம் (Renewable Energy Transition) பாரம்பரிய எண்ணெய் மற்றும் எரிவாயு அரசியலை மெல்ல மாற்றி, புதிய சக்தி மையங்களை உருவாக்குகிறது.
காலநிலை அகதிகள் மற்றும் பாதுகாப்புச் சவால்கள்
காலநிலை மாற்றத்தின் விளைவாக உருவாகும் இடம்பெயர்வு, “காலநிலை அகதிகள்” என்ற புதிய சமூகக் குழுவை உருவாக்கியுள்ளது. இதனால், எல்லை மோதல்கள், சமூக பதற்றங்கள், அரசியல் நிலைமையின்மை, ஆகியவற்றை தீவிரப்படும். இதனால் காலநிலை மாற்றம் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவாதங்களில் முக்கிய இடம் பெறுகிறது.
-
சர்வதேச அரசியல் மற்றும் காலநிலை ஒத்துழைப்பு
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியமானதாகியுள்ளது. பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் போன்ற உடன்படிக்கைகள் உலகளாவிய அரசியல் மேடையில் காலநிலையை மையமாக்கியுள்ளன. இருப்பினும், வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், இடையே பொறுப்பு மற்றும் நிதி பகிர்வு குறித்து கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன.
இந்தியா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பங்கு
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சி தேவையும் நிலவுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலீடுகள், காலநிலைத் தாங்குதிறன் கொண்ட விவசாயம் மற்றும் சர்வதேச பேச்சுவார்த்தைகளில் செயற்பாட்டான பங்கு ஆகியவை இந்தியாவின் புவிசார் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துகின்றன.
காலநிலை மாற்றம் உலக அரசியலின் இயல்பை மாற்றும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் வள அரசியல், பாதுகாப்பு மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச கூட்டணிகள் அனைத்தும் காலநிலை காரணிகளால் தீர்மானிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் போட்டியைத் தவிர்த்து, ஒத்துழைப்பை முன்னிலைப்படுத்துவது அவசியமாகும். நிலையான வளர்ச்சியும் உலக அமைதியும் இதன் மீது சார்ந்துள்ளன.
- யாத்ரா
