பிலிப்பைன்ஸை சமீபத்தில் தாக்கிய தசாப்தங்களில் இல்லாத மோசமான ராய் என்ற சூறாவளிக்கு பலி எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவுப் பகுதிகளை ராய் புயல் மோசமாகத் தாக்கியது. இதில் பலத்த உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 5000 இற்கும் அதிகமானவர்கள் பலத்த காயம் அடைந்ததுடன் 56 பேரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். கடற்கரைப் பகுதிகளில் மிக மோசமான அழிவு ஏற்பட்டுள்ளது என பிலிப்பைன்ஸின் செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. வீடுகள், பாடசாலைகள், வைத்திய சாலைகள், பாதைகள் மற்றும் பாலங்கள் எனப் பலவும் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன.
பசுபிக் சமுத்திரத்தின் உலகின் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றுக் கணக்கான தீவுகளைக் கொண்ட நாடான பிலிப்பைன்ஸில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 20 தைபூன் சூறாவளிகள் தாக்கி வருகின்றன. ஆயினும் 2013 ஆமாண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கிய சூப்பர் தைபூனான ஹையானுக்கு 7300 பொது மக்கள் பலியாகி அல்லது காணாமற் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை தெற்கு பங்களாதேஷில் வெடி விபத்தில் சிக்கிய படகொன்றில் இருந்த குறைந்தது 32 பேர் பலியாகி இருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர். ஓர் ஆற்றின் நடுவே ஒபிஜான் 10 என்ற இந்த 3 அடுக்கு படகு விபத்தில் சிக்கிய போது அதிகளவான மக்கள் அதில் இருந்ததாகவும், இதில் 32 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப் பட்ட போதும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது.
உலகின் மிகப் பெரிய கழிமுகங்கள் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ள நாடு பங்களாதேஷ் என்பதால் அங்கு அதிகளவில் ஆறுகளில் தரம் குறைந்த படகுகளில் அதிக சனத்தொகையுடன் பயணங்கள் மேற்கொள்ளப் படுகிறது. இது விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட ஒரு காரணமாகும். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்து டாக்காவில் இருந்து தெற்கே 250 கிலோமீட்டர் தொலைவில் ஜக்காகத்தி என்ற கிராமத்துக்கு அருகே ஆற்றில் இடம்பெற்றுள்ளது.
உலகின் மிகவும் சனச்செறிவு மிக்க தெற்காசிய நாடுகளில் ஒன்றான பங்களாதேஷில் சுமார் 170 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.