ஒமிக்ரோன் மாறுபாடு அறியப் பட்டமை மற்றும் 2022 ஆமாண்டு குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை சிரமங்கள் இன்றி நடத்துவது போன்ற காரணங்களுக்காக சீனாவின் சியான் நகரில் புதன்கிழமை இரவு முதல் மீண்டும் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இதனால் சுமார் 1 கோடியே 30 இலட்சம் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன் கோவிட் தொற்று தொடங்கிய போது சீனாவின் வுஹான் நகரம் எதிர்கொண்ட அதே கடுமையான சூழலைத் தற்போது இந்த நகரம் எதிர்கொள்கின்றது. ஆனாலும் இந்த ஊரடங்கின் பின்னால் உள்ள முக்கிய விடயம் சீனாவின் பூச்சிய கொரோனா தொற்றுக் கொள்கை என்பது குறிப்பிடத்தக்கது.
குளிர் கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ள சீனத் தலைநகர் பீஜிங் இன் வடக்கே ஷாங்சி மாகாணாத்தின் தலைநகரே இந்த சியான் ஆகும். இங்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் உள்ளது. மேலும் இங்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் வீட்டில் ஒருவர் இரு நாட்களுக்கு ஒரு முறை வெளியே வர அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் கோவிட் பரிசோதனைகள் இருமடங்காக அதிகரிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஒமிக்ரோன் பரவுகை காரணமாக அமெரிக்காவில் தற்போது தினசரி தொற்று மீண்டும் 2 இலட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. பிரிட்டனிலோ வியாழனன்று கொரோனா புதிய உச்சம் அதாவது 1 இலட்சத்துக்கும் அதிகமான தொற்றுக்களும் சுமார் 147 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. பிரிட்டனில் ஒமிக்ரோன் தொற்றுக்கள் வேகமாகப் பரவி வருவதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குப் பின் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
நவம்பர் 25 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் முதலில் அறியப் பட்ட ஒமிக்ரோன் மாறுபாடு இதுவரை 106 நாடுகளில் இனம் காணப் பட்டுள்ளது. இது முக்கியமாகத் தற்போது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. ஆயினும் முந்தைய மாறுபாடுகளை விட இதனால் ஏற்படும் பாதிப்பு குறைவு என்றும், அதிகளவில் மரணங்கள் ஏற்படவில்லை என்றும் முன்பு கூறப்பட்ட நிலையில், தற்போது தமது நாட்டில் இதன் தொற்று வீதம் குறையத் தொடங்கியிருப்பதாகத் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்காவின் ஒரீகன் சுகாதார விஞ்ஞான பல்கலைக் கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், முழுமையாகத் தடுப்பூசி போடப் பட்டவர்கள் தற்செயலாக ஒமிக்ரோன் மாறுபாட்டின் தாக்குதலுக்கு உள்ளாகி மீண்டு வர நேர்ந்தால் அதன் பின் அவர்களுக்கு கோவிட் இன் எந்த மாறுபாட்டுக்கு எதிராகவும் மிக அதிகபட்ச Super Immunity என்ற நோய் எதிர்ப்பு சக்தியை அடைவர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.