மிக மிக வேகமாகப் பரவக் கூடிய தனது இயல்பு காரணமாக உலகை இன்று அச்சுறுத்தி வரும் கோவிட் 19 வைரஸின் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு இதுவரை 77 உலக நாடுகளில் பரவியிருப்பது கண்டறியப் பட்டிருப்பதாகவும், இது உலகின் எப்பாகத்தையும் பாதிக்கலாம் என்றும் உலக சுகாதாரத் தாபனத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.
வேகமாகப் பரவுவதாலும், தடுப்பூசிகளின் திறன்களைக் குறைப்பதாக அஞ்சப் படுவதாலும் ஒமிக்ரோன் திரிபு மிகவும் உலக மருத்துவ நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ள போதும் இதுவரை அது பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தியதாக தகவல் இல்லை என்பது உலகை சற்று நிம்மதியில் வைத்திருந்தது. ஆனால் தற்போது பிரிட்டனில் ஒமிக்ரோன் மாறுபாட்டால் முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இவர் தடுப்பூசி போடப் பட்ட நபரா என்பது குறித்து இன்னமும் தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்னும் கண்டு பிடிக்கப் படாத போதும் பெரும்பாலான நாடுகளில் ஒமிக்ரோன் பரவியிருக்க வாய்ப்புள்ளது என்றும் முந்தைய மாறுபாடுகளுடன் சேர்ந்து இதுவரை நாம் காணாத வேகத்தில் அது பரவுகின்றது என்றும் அதனோம் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த ஒமிக்ரோன் மாறுபாடு நவம்பர் 24 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டு உலக சுகாதாரத் திணைக்களத்தால் அறிவிக்கப் பட்டிருந்தது.
இதேவேளை தென்னாப்பிரிக்காவை அடுத்து ஒமிக்ரோனால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடாக பிரிட்டன் மாறி வருகின்றது. இன்னும் 48 மணித்தியாலத்தில் இலண்டனில் ஆதிக்கம் செலுத்தும் கோவிட் மாறுபாடாக இது இருக்கும் என பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில், தற்போது இலண்டனில் 44% வீதமான தொற்றுக்களுக்குக் காரணம் ஒமிக்ரோன் திரிபு என்றும் இன்னும் 48 மணித்தியாலத்தில் இதுவே அதிக ஆதிக்கம் செலுத்தும் என்றும் தெரிவித்தார். மேலும் இலண்டனில் தினசரி தொற்றுக்கள் 2 இலட்சமாக உயர வாய்ப்புள்ளது என்று அஞ்சப் படுவதும் குறிப்பிடத்தக்கது.