கடந்த சனிக்கிழமை சீனாவின் டியான்வென்-1 என்ற ஆளில்லா விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்து செவ்வாய்க் கிரகத்தின் தரையில் விண்கலத்தை இறக்கிய உலகின் 3 ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.
தற்போது இந்த விண்கலத்தில் இருந்து வெளிப்பட்டு செவ்வாய்க் கிரகத்தின் தரையில் ஷுரோங் என்ற ரோவர் வண்டி நகரத் தொடங்கியுள்ளது. இந்த ரோவரானது செவ்வாயின் தரை மற்றும் சுற்றுச் சூழல் பற்றியும் அங்கு பண்டைக் காலத்தில் உயிர் வாழ்க்கை இருந்ததா என்பது குறித்தும் ஆய்வு செய்யவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த ஷுரோங் ரோவர் செவ்வாயில் எடுத்த முதலாவது புகைப் படங்களை சீனா இணையத் தளங்களில் வெளியிட்டுள்ளது.
ஷுரோங் ரோவரில் செவ்வாயின் பாறைத் தன்மை மற்றும் தண்ணீர் உள்ளதா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள முக்கிய 5 கருவிகளும், கேமராக்களும் பொருத்தப் பட்டுள்ளன. செவ்வாயின் வடக்குப் பகுதியிலுள்ள உட்டோப்பியா பிளானிட்டியா என்ற இடத்தில் இறங்கியிருக்கும் டியான்வென் - 1 விண்கலத்தின் ஷுரோங் ரோவரானது கிட்டத்தட்ட 90 செவ்வாய் நாட்களுக்கு அங்கு ஆய்வுப் பணியில் ஈடுபடும் என்பது சீன விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பாகும்.
2014 ஆமாண்டு செப்டம்பர் 24 ஆம் திகதி இந்தியாவின் மங்கல்யான் என்ற ஆர்பிட்டர் செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது. இதன் மூலம் உலகில் செவ்வாயின் சுற்று வட்டப் பாதைக்கு முதலில் ஆர்பிட்டரை அனுப்பிய ஆசிய நாடாகவும், இதனை முதலாவது முயற்சியிலேயே சாத்தியமாக்கிய உலக நாடாகவும் இந்தியா பெருமை பெற்றது குறிப்பிடத்தக்கது.