ஆசியப் பிராந்தியத்தில் இலங்கையை தூய்மையான நாடாக மாற்றும் நோக்கில் ‘தூய்மையான இலங்கை’ என்ற விசேட செயற்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதற்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் நாட்டில் தூய்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள், ரயில்கள், கழிவறைகள், ஆறுகள், கடற்கரைகள் போன்றவற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அரசாங்கத்தை அமைப்பதற்கு பங்களித்த இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இந்த நிதியில் பங்களிக்கக்கூடிய வகையில் நிதி திரட்டுவதற்காக பங்களிப்பு நிதியொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
பொதுத் தேர்தலின் பின்னர் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.