நாட்டில் தினமும் 938 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதில் 32 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுவதாகவும், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் 4 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரியவந்துள்ளது.மீதி சேகரிக்கப்பட்டாலும், முறைசாரா முறையில் அப்புறப்படுத்தப்படும் சூழல் உருவாகி வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
தொழில்துறையினர் எந்தவித கட்டுப்பாடும் இன்றி இரண்டாம் நிலை பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதும் இதன்போது தெரியவந்தது. எனவே, எதிர்காலத்தில் தொழில்துறையின் தேவைக்கேற்ப உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியது.
இலங்கை வருடாந்தம் 4 இலட்சம் மெற்றிக் தொன் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதோடு 20,000 மெற்றிக் தொன் கழிவு பிளாஸ்டிக் இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வருடம் 20,000 மெற்றிக் தொன் கழிவு பிளாஸ்டிக் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்ட போதிலும், இலங்கையின் தொழிற்சாலைகளுக்கு 5,179 மெற்றிக் தொன் கழிவு பிளாஸ்டிக் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, தொழில் துறையின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப அனுமதி வழங்கவும், குறிப்பிட்ட 5 ஆண்டுகளுக்குள் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக்கை சேகரிக்கும் அமைப்பை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு குழு தலைவர் அறிவுரை வழங்கினார்.
அதிக செலவு காரணமாக பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக சேகரிப்பதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், பிளாஸ்டிக் சேகரிப்புக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரிப்பதன் மூலம் இந்தத் நடைமுறையை அதிகரிக்க முடியும் என தலைவர் குறிப்பிட்டார். மேலும், பிளாஸ்டிக் சேகரிப்பிற்காக தீவின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மையங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, உத்தேச சுற்றுச்சூழல் சட்டமூலத்தை இறுதி செய்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் குழுவினால் விரிவாக ஆராயப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல மற்றும் சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.