துபாயில் நடைபெற்ற கட்சிகளின் 28வது மாநாட்டின் (COP28) போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (03) பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் (BMGF) இணைத் தலைவர் பில்கேட்ஸுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, திரு. கேட்ஸ், வலுவான மற்றும் காலநிலைக்கு ஏற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க BMGF இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். இலங்கையில் ஏற்கனவே முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இவ் அறக்கட்டளை, நாட்டுடனான தனது ஈடுபாட்டை ஆழப்படுத்த உறுதியளித்தது. விவசாய நவீனமயமாக்கல் மற்றும் விவசாயத்திற்கான தரவு அமைப்புகளை நிறுவுதல் ஆகியவை கவனம் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் காலநிலை மற்றும் தழுவலில் இலங்கையின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதும் இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.
இந்த நிலையான திட்டங்களை முன்னெடுப்பதில் BMGF இன் ஆதரவைக் கோரி, COP28 இல் இலங்கையின் பசுமை முயற்சிகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்னிலைப்படுத்தினார். அழுத்தமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, உலகளாவிய முயற்சியில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க இலங்கையின் விருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். ஒரு விரிவான மற்றும் தாக்கமிக்க கூட்டாண்மையை உறுதி செய்வதற்காக BMGF உடனான ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து இக்குழு விவாதித்தது.