ஹவுதி தாக்குதல்களுக்கு எதிராக பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
செங்கடலில் ஈரான் ஆதரவோடு இயங்கும் ஹவுதி போராளிகள் சரக்கு கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்து சர்வதேச கப்பல் நிறுவனங்களிடையே எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதாக ஹவுதிகள் கூறுகின்றனர்.
செங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு காரணமாக சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, போக்குவரத்து நேரம் தாமதமாகிறது.
"செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதை எதிர்கொள்ள, கப்பல்கள் செங்கடலில் செல்லாமல் தென்னாப்பிரிக்காவை சுற்றி திரும்பினால், சரக்கு செலவுகள் அதிகரிக்கும்." என்று கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 'ஷில்பா அபிமானி 2023' நிகழ்வின் உரையில் ஜனாதிபதி கூறினார்.