இலங்கையில் நாடாளவிய ஊரடங்கு இருந்து வரும் நிலையில், டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. இன்றும் அவை பாரிய அளவில் முன்னெடுக்கபட உள்ளதாகத் தெரிய வந்த நிலையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதுடன், நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடாளவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்குச் சட்டத்தின் போது அத்தியாவசிய சேவைகள் தவிர பொதுமக்கள் வெளியே செல்லவோ, பொது இடங்களில் கூடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் யூ-டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
நாட்டின் முக்கிய இடங்களிலும், வீதிகளிலும் பாதுகாப்புப் படையினர் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.