புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்றுக் கொண்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
இந்தநிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Congratulations to the newly appointed Prime Minister of #lka, @RW_UNP. I wish you all the best as you navigate these troubled times.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 12, 2022
கடந்த 9ந்திகதி தனது பதவி விலகலை ட்விட்டர் குறிப்பில் தெரிவித்திருந்ததின் பின்னதாக இன்று அவர் மீண்டும் தனது சமூகவலைத்தளத்தில் இந்த வாழ்த்தினைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.