மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நேற்று (16) புதுடெல்லியில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்திருந்த இந்த கலந்துரையாடல், இந்தியாவின் சில முக்கிய தொழில்முனைவோரை ஒன்றிணைத்தது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இலங்கையின் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை முன்னிலைப்படுத்திய ஜனாதிபதி திஸாநாயக்க, நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு இந்திய தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் உரையாடல் வலியுறுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, இந்திய வர்த்தக தலைவர்கள் இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்ததுடன், தேவையான முதலீட்டு வசதிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது.
இக்கலந்துரையாடலின் போது தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
--PMD--