நாடு முழுவதிலும் போராடி வரும் மக்களுக்கு தெளிவான பதிலை அரசாங்கம் முன் வைக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்கள் போராட்டங்களுக்கு, ஜனாதிபதி அவர்கள் பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உண்டு. தான் விலகுவேனா? இல்லையா? என்பதை தெளிவாகக் கூறவேண்டும். விலகவில்லை என்றால், அடுத்த வேலைத்திட்டத்தை முன்வைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அரசாங்க உறுப்பினர்கள் சிலர் சுயாதீனம் என்றும், சிலர் சுயாதீனமான குழுவாகவும், இயங்குவதாக அறிவித்து வருகின்றனர். இந் நிலையில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பிரேரணையை முன்வைத்து அரசின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். அப்படியென்றால்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என்றார்.
இது இவ்வாறிருக்க, நாட்டின் தற்போதைய நிலைக்கு தீர்வு காண அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவரும் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் மேலும் பேசுகையில், " நான் அரசியலில் இருக்கவும் தயார், ஓய்வு பெறவும் தயார். ஆனால் கள்வர்களுடன் ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரில்லை. அரசாங்கத்துக்கு முடியவில்லை என்றால், நாங்கள் முறையாக பொறுப்பு ஏற்க தயார். அவ்வாறு செய்யவேண்டுமாயின், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் " எனக் கூறினார்.