இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில், மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் குறித்தும், அதனை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார செயலாளருக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிக்க (GMOA) நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நிலவும் நெருக்கடிகளில், மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு நாடுமுழுவதிலுமுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்காக்கும் 3 மருந்துகளுக்கும் 140 அத்தியாவசிய மருந்துகளுக்கும் மிகவும் தட்டுப்பாடு நிலவுவதாக மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை மற்றும் வழங்கல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்று வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இரத்மலானையில் உள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலை வளாகம் மற்றும் உற்பத்திப் பிரிவிற்கு முன்னால் அதன் ஊழியர்கள், மருந்து தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வைக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது இவ்வாறிருக்க, இறக்குமதி மருந்துப் பொருட்களின் விலைகளை 20 சதவீதத்தால் அதிகரிக்க மருந்து இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.