நேற்று (டிச.09) மாலை 5.10 மணியளவில் ஏற்பட்ட திடீர் பாரிய மின்வெட்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) கூறுகிறது.
இரவு 11:00 மணிக்குள் முழுமையாக மின்சாரம் சீரமைக்கப்படுவதை உறுதிசெய்ய, ‘படிப்படியாக’ நடவடிக்கை எடுத்ததாக அரசுக்குச் சொந்தமான நிறுவனம் கூறியது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு காரணமான மின்சார பாதையின் முறிவுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில், அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அதி உஷார் நிலையில் இருக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டது அல்லது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில மணி நேரங்களுக்குள் நீர் விநியோகத்தை மீட்டெடுக்க முடிந்ததாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைகளினால் ரயில் சேவைகள் தடையின்றி இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனமழை நிலைமை காரணமாக பொல்கொல்ல, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் ரன்டெம்பே நீர்த்தேக்கங்களின் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் இத்தகைய பெரிய மின்வெட்டுகள் பதிவாகியிருந்தது. ஆகஸ்ட் 2020 இல், கெரவலப்பிட்டியவில் மின்சார கம்பிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 6 மணித்தியாலங்கள் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது.
மேலும், 2021 டிசம்பரில், கொத்மலை மற்றும் பியகம அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார விநியோகம் தடைப்பட்டது. இவ்வாறான மின்தடைகள் மீண்டும் ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபாரிசுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஆனால் நேற்று 6 மணித்தியாலங்கள் திடீரென மின்சாரம் தடைப்பட்டதை அடுத்து இது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.