இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக இன்று இரவு கூடிய மக்கள், ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர், தண்ணீர் தாக்குதலை மேற்கொண்ட போதும் கூட்டம் கலையாத நிலையில் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிய வருகிறது. இதனால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களைத் தாக்கியதாகவும், பஸ் ஒன்றினைத் தீயிட்டதாகவும் அறியவருகிறது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிந்தைய தகவல்களின்படி, கொழும்பின் வேறு சிலபகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளதாகவும் தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதிகளிலும்உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவு, களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.