“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசாங்கத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. அவர் தோற்றுப் போய்விட்டார். அதனாலேயே, பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருகிறார்கள்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
“பாராளுமன்றத்துக்கு பஷில் ராஜபக்ஷ வருவது எமக்கொன்றும் புதுமையான விடயமல்ல. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் வந்தபோதே பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவார் என்று எமக்குத் தெரியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நளின் பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பற்றி கதைப்பதற்கு கூட யாருமில்லை என்பதால், சேர் பெயிலென தெரிந்துக்கொண்டு அதிலிருந்து மீள பஷிலைப் பயன்படுத்த பார்க்கின்றனர்.
இந்த அரசாங்கத்தால் பொருளாதார நிதி முகாமைத்துவத்தை முன்னெடுக்கமுடியவில்லை. அதனால்தான் பஷில் வந்து பொருளாதார நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பாரென நினைக்கின்றனர்.
எமது அரசாங்கத்தில் பொருளாதாரம் தொடர்பான கல்வி அனுபவம் தெளிவு உள்ளவர்களான கலாநிதி ஹர்ஷ டீ சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோரிடமே கையளிப்போம்.
பொருளாதாரத்தை பலப்படுத்த பஷிலுக்கு முடிந்திருந்தால் 2015- 2019ஆம் ஆண்டுக்குள் செய்திருக்கலாம். 2015ஆம் அரசாங்கத்தின் தோல்விக்கு பஷில் தான் காரணமென வசைப்பாடியவர்கள் இன்று பொருளாதாரத்தை பலப்படுத்த பஷிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மஹிந்த தோல்வியடைந்துவிட்டார், கோட்டாவும் தோல்வியடைந்துவிட்டார். பஷிலையம் நியமிக்கப் பார்த்து இவர்களது தோல்வியை மறைக்கப் பார்க்கின்றனர்.” என்றுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    