எமது கடல் வளத்தை வெளிநாட்டினர் சுரண்டும் நிலை உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் நேற்று திங்கட்கிழமை மக்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விடயத்தை பார்ப்பதற்காக நாங்கள் சென்றிருந்தோம். குறித்த அமைவிடம் மக்களிற்கு தெரியாத மறைவிடமாக அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தினர் அரியாலையில் தமது அலுவலகத்தை வைத்துள்ளனர் என்ற விபரத்தினையும் நாங்கள் சேகரித்துள்ளோம். சட்டவிரோதமான அனுமதி கடல் தொழில் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால், இந்த நாட்டிலே சீன ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
நேற்றைய தினம் குடத்தனையில் உள்ள எனது வீட்டுக்கு சென்று திரும்புகின்றபோது வீதி அபிவிருத்தி பணிகளில் சீனர்கள் நின்றார்கள். நான் படம் எடுத்து வைத்துள்ளேன். வீதி வேலை செய்வதற்கு தொழிலாளிகள்கூட எங்கள் ஊரில் எடுக்காமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து உபயோகிக்கின்றார்கள்.
இந்த விடயங்களை நாங்கள் முழுமையாக வெளிப்படுத்தவுள்ளோம்.இது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள். எங்கள் மக்களுடைய கடல் வளத்தை சுரண்டுவதும், கடல் அட்டைகள் பிடிப்பது தொடர்பிலும் பல தடவைகள் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது.
வெளி இடங்களிலிருந்து வந்து தொழிலை செய்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தார்கள். இப்பொழுது வெளி இடங்கள் என்று சொல்வதற்கு அப்பால் வெளிநாடுகளிலிருந்து தூர பிரதேசங்களிலிருந்து இதற்கென்று ஆட்கள் வருவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பின்னணிகளை வெகு விரைவிலே நாங்கள் வெளிப்படுத்துவோம்.” என்றுள்ளார்.