“இரட்டை குடியுரிமையுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகளை வகிப்பது நாட்டிற்கு பலனளிக்காது. அது, அந்த நபருக்கே பயனளிக்கும்.” என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ விரைவில் முக்கிய அமைச்சு பதவியொன்றை பொறுப்பேற்கவுள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பெங்கமுவே நாலக தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் அரசாங்கத்தில் பதவி வகித்து பிரச்சினை ஏற்பட்டவுடன் அந்த நாட்டுக்கு சென்றுவிட முடியும். எனவே, இரட்டை குடியுரிமையுடன் நாட்டை ஆட்சி செய்ய அனுமதிப்பது மிகப்பெரிய தவறு.
நல்லது செய்ய வேண்டும் என்றால், பஷில் ராஜபக்ஷ அதற்காக பாராளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இரட்டை குடியுரிமைகொண்டவர்கள் நாட்டு நிர்வாகத்திலும், அரசியலிலும் பங்குப்பற்றுவதும் தவறானது. இரட்டை குடியுரிமையை உடையவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு.” என்றுள்ளார்.