நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்கலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரையிலும் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்துவருகின்றனர். அவர்களை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வைத்திய துறையினர், தாதியர்கள், எனைய சுகாதார தரப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸார் உள்ளிட்டோரை நாம் மறக்கக் கூடாதெனத் தெரிவித்த முன்னாள் பிரதமர், சுகாதார தரப்பினர், கஷ்டப்பட்டு, நித்திரை விழித்து, நோயாளியாகுவது மட்டுமன்றி உயிரிழப்பதால் சுகாதாரத்தறையே வீழ்ச்சியடைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றுள்ளார்.
காணொளியில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, “போதுமான அளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் தேவை எமக்குள்ளது. தடுப்பூசிகளைப் பெறவேண்டுமாயின் அந்நிறுவனங்களின் உத்தியோகப்பூர்வ பிரதிநிதிகள் ஊடாக மாத்திரமே பெறவேண்டும். ஏனையவர்கள், இக்காலத்தில் சிலவற்றை சம்பாதிக்கவே உள்ளனர்.
இதனை பணம் சம்பாதிக்கும் காலமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனைய நாடுகளில் தற்போது 12 வயதுக்குமேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு ஆரம்பித்துள்ளது. அப்படியாயின் இலங்கைக்கு 3 தொடக்கம் மூன்றரை கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும்.
இதேபோல, இரண்டாவது தடுப்பூசி தொகை கிடைக்கும் வரை நாம் எம்மிடமுள்ள தடுப்பூசிகளை முகாமைத்துவம் செய்ய வேண்டும். தடுப்பூசிகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் ஆலோசனைகளை வழங்கியுள்ளன. ஆனால், நாம் அனைத்தையும் பின்பற்றுவதில்லை. எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டும். இதனைக் கட்டுபடுத்த எவ்வித மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே குறித்த விடயங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.