பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீர் பிரதேச அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தார். இதன்போது ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இடம்பெற்றது. இதில் காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடாத்துவது தொடர்பாக பிரதமருடன் ஆலோசனை நடத்துவதற்காக ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முக்கியமான அரசியல் கட்சிகள் பங்கேற்றிருந்தனர்.
இதனையடுத்து சந்திப்பின் போது பிரதமருடன் கலந்து ஆலோசித்த கோரிக்கைகள் தொடர்பில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு (என்.சி) மாநிலத்தை மீட்டெடுக்கக் கோரியதுடன், 2019 ஆகஸ்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் மக்களின் நலனுக்காக இல்லை என்றும் அதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பிரதமரிடன் கூறினோம்.
மேலும் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட சட்டசபை தேர்தல் நடத்தப்படவேண்டும். அத்தோடு ஜம்மு காஷ்மீரில் காஷ்மீரி பண்டிக்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அமைத்தல், மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல் உள்ளிட்ட 5 விதமான கோரிக்கைகளை இச் சந்திப்பு கூட்டத்தில் முன்வைத்ததாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.